செய்திகள்
கொரோனா தொற்று பரிசோதனை

காரைக்காலில் கைதிக்கு கொரோனா தொற்று உறுதி - போலீஸ் நிலையம் மூடல்

Published On 2020-05-11 09:24 GMT   |   Update On 2020-05-11 09:24 GMT
காரைக்காலில் கைதிக்கு கொரோனா தொற்று உறுதியானதால் திருநள்ளாறு போலீஸ் நிலையம் மூடப்பட்டது.
காரைக்கால்:

புதுவை மாநிலம் காரைக்கால் திருநள்ளாறு சுரக்குடியைச் சேர்ந்த 37 வயது மதிக்கத்தக்க ஒருவர் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது.

புகாரின் பேரில் திருநள்ளாறு போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை புதுச்சேரியில் உள்ள சிறையில் அடைப்பதற்கு முன்னர் அவருக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்று பரிசோதிப்பதற்காக மாதிரிகள் எடுக்கப்பட்டது.

பின்னர் ரத்த மாதிரி திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று இந்த பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் கொரோனா தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து அவர் வசிக்கும் குடியிருப்பு பகுதிகள் மூடி சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட சுகாதாரத்துறையினர் போலீசார் உதவியோடு சுரக்குடி பகுதிக்கு சென்று அவருடன் தொடர்புடைய சுமார் 8 பேரின் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

கைதிக்கு கொரோனா தொற்று உறுதியானதால் திருநள்ளாறு போலீஸ் நிலையம் மூடப்பட்டது. அந்த பகுதியில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.
Tags:    

Similar News