புதுவை அருகே பண்ணை வீட்டில் தொழிலாளி மர்ம மரணம்
சேதராப்பட்டு:
புதுவையை அடுத்த சின்னகோட்டக்குப் பத்தில் தென்னந்தோப்புடன் கூடிய பண்ணை வீடு உள்ளது. இந்த பண்ணை வீடு சென்னையை சேர்ந்த தொழிலதிபருக்கு சொந்தமானது. இந்த பண்ணை வீட்டில் புதுவை சண்முகாபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சாமிநாதன் (வயது61) என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் பண்ணை வீட்டிற்கு வேலைக்கு வந்த சாமிநாதன் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மகன் சத்யநாதன் நேற்று பண்ணை வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது அங்கு அவரது தந்தை சாமிநாதன் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் கோட்டக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விஷபூச்சி கடித்ததால் சாமிநாதன் இறந்தாரா? அல்லது திடீர் மாரடைப்பால் இறந்து போனாரா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.