செய்திகள்
புதுவை முதலமைச்சர் நாராயணசாமி

முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் வாக்குவாதம் செய்த சொர்ணாநகர் மக்கள்

Published On 2020-05-07 08:41 GMT   |   Update On 2020-05-07 08:41 GMT
புதுவை சொர்ணா நகர் பகுதிக்கு ஆய்வுக்கு சென்ற முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் அப்பகுதி மக்கள் நீண்டநாட்களாக அடைபட்டு அவதிப்படுவதாகவும், தங்கள் பகுதியை விடுவிக்க வேண்டும் என்றும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:

புதுவை அரியாங்குப்பம் சொர்ணாநகரை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அரியாங்குப்பம் சொர்ணாநகர் பகுதி சீல் வைக்கப்பட்டது. 21 நாட்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.

ஆனால், ஒரு மணி நேரத்தில் சுகாதாரத்துறை அறிவுறுத்தலால் மீண்டும் அப்பகுதி சீல் வைக்கப்பட்டது. தற்போது சொர்ணாநகர் பகுதி சீல் வைக்கப்பட்டு 40 நாட்களை கடந்துவிட்டது.

இந்நிலையில் இன்று காலை முதல்-அமைச்சர் நாராயணசாமி சொர்ணா நகர் பகுதிக்கு ஆய்வுக்கு சென்றார். அப்போது அப்பகுதி மக்கள் நீண்டநாட்களாக அடைபட்டு அவதிப்படுவதாகவும், தங்கள் பகுதியை விடுவிக்க வேண்டும் என்றும் கூறினர். அப்போது நாராயணசாமி மண்டலங்களாக பிரிப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது. மத்திய அரசுதான் இதனை முடிவு செய்கிறது என தெரிவித்தார்.

அப்போது அப்பகுதியினர், அதிகாரம் இல்லாவிட்டால் எதற்கு ஆய்வுக்கு வருகிறீர்கள்? என எதிர்கேள்வி கேட்டனர். இன்னும் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு சிலர் விடுவித்து விடு, விடுவித்து விடு என கோ‌ஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது.

ஒரு சிலர் அதிகாரம் பெறுவதற்காக உண்ணாவிரதம் இருக்கவும் தயார் என கூறினர். இதனையடுத்து முதல்-அமைச்சர் நாராயணசாமி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், விரைவில் சொர்ணாநகர் பகுதிக்கு தளர்வு அளிக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். பின்னர் அங்கிருந்து கிளம்பி சென்றார்.

Tags:    

Similar News