செய்திகள்
கோப்பு படம்

புதுவையில் ஊரடங்கு காலத்தில் மதுபானம் விற்ற கடைகள் மீது சி.பி.ஐ. வழக்கு

Published On 2020-05-06 14:45 IST   |   Update On 2020-05-06 14:45:00 IST
புதுவையில் ஊரடங்கு காலத்தில் தடையை மீறி மது பாட்டில்கள் விற்கப்பட்ட மதுக்கடைகள் மீது சிபிஐ வழக்க தொடர்ந்துள்ளனர்.
புதுச்சேரி:

கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்த ஊரடங்கு காலத்தில் மது கடைகளுக்கும் தடை விதிக்கப்பட்டன. ஆனால், புதுவையில் பல மதுக்கடைகளில் இந்த தடையை மீறி மது பாட்டில்கள் விற்கப்பட்டன. மேலும் வழக்கத்தை விட அதிக விலைக்கும் விற்றனர்.

இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.திமு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் கவர்னருக்கு மனு அனுப்பினார்.

இதைத்தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவத்சவா, கலால்துறை கமி‌ஷனர் பொறுப்பு வகிக்கும் கலெக்டர் அருண் ஆகியோருக்கு கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டார்.

அதன்படி அவர்கள் நடவடிக்கைகள் மேற்கொண்டனர். சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் தலைமையில் சிறப்பு விசாரணை குழுவும் அமைக்கப்பட்டது.

மதுக்கடைகளில் இருப்பு விகிதங்கள் சோதனை செய்யப்பட்டன.

அதில், பல கடைகளில் இருப்பு குறைந்தது. அந்த கடைகள் தவறு செய்து இருப்பதாக கருதப்பட்டு 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

100 கடைகளின் லைசென்சு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. கலால்துறை துணை கமி‌ஷனர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

மது விற்பனைக்கு உடந்தையாக இருந்ததாக தாசில்தார் கைது செய்யப்பட்டார்.

வருவாய் மற்றும் கலால்துறையை சேர்ந்த 8 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

இந்த பிரச்சினை கவர்னர்-அமைச்சரவை இடையேயான பனிப்போராக மாறியது.

இந்த நிலையில் முதல்- அமைச்சர் நாராயணசாமி மது விற்பனை விசாரணை அமைப்பை கலைத்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் சி.பி.ஐ. போலீசார் இதில் தலையிட்டுள்ளனர். மது விற்பனை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதை சி.பி.ஐ. நேரடியாக வெளியே தெரிவிக்கவில்லை.

ஆனால், கவர்னர் கிரண்பேடி சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளார்.

அவர், இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில் மதுபான விற்பனையில் புதுவை அரசுக்கு இழப்பு ஏற்படுத்த காரணமாக இருந்தவர்கள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

இது தொடர்பாக தகவல்கள் இருந்தால் சி.பி.ஐ.க்கு தகவல் தெரிவிக்கலாம். அல்லது கவர்னர் மாளிகையில் குறை தீர்ப்பு அதிகாரியாக இருக்கும் பாஸ்கரனுக்கு வாட்ஸ்-அப் மூலம் தகவல் கூறலாம் என்று கூறப்பட்டுள்ளது.

சி.பி.ஐ. விசாரணை நடத்துவதால் பல மதுக்கடைகளின் உரிமையாளர்கள் இதில் சிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News