செய்திகள்
அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா

வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் பற்றி தகவல் தெரிவிக்க வேண்டும் - கலெக்டர் ரத்னா அறிவுறுத்தல்

Published On 2020-05-04 16:57 IST   |   Update On 2020-05-04 16:57:00 IST
வெளி மாவட்டங்களிலிருந்து யாராவது வந்திருப்பது தெரிய வந்தால் அவர்களை பற்றி தகவல் தெரிவிக்க வேண்டும் என கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.
அரியலூர்:

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையும், பொது மக்களிடம் விழிப்புணர்வும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்திற்கு வெளி மாவட்டத்தில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றுடன் வந்தவர்கள் மூலமும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மூலமும் வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில், வெளி மாவட்டம், வெளி மாநிலத்திலிருந்து வருபவர்கள், ஏற்கனவே அவ்வாறு வந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்யவில்லை என்றால், உடனடியாக தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைகளுக்கு தாமாக சென்று நோய் தொற்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

வெளி மாவட்டங்களிலிருந்து யாராவது வந்திருப்பதும், அவர்கள் பரிசோதனை செய்யவில்லை என்பதும் தெரிய வந்தால், அருகிலுள்ளவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையில் உள்ள 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ அல்லது 04329-228709 என்ற தொலைபேசியிலோ, அருகில் உள்ள போலீஸ் நிலையத்திலோ, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களிடமோ உடனடியாக தகவல் தெரிவிக்கவும். தகவல் தெரிவிப்பவர்கள் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். அரியலூர் மாவட்டம் கொரோனா வைரஸ் நோய் தொற்று இல்லா மாவட்டமாக மாற்றுவதற்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Similar News