செய்திகள்
கார்த்திக் பாலா - செல்வின்

மின்னல் தாக்கி புதுமாப்பிள்ளை உள்பட 4 பேர் பலி - மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி

Published On 2020-04-27 10:39 IST   |   Update On 2020-04-27 10:39:00 IST
தமிழகத்தில் மின்னல் தாக்கி புதுமாப்பிள்ளை உட்பட 4 பேர் பலியாகினர். மேலும் மின்சாரம் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் அடுத்த கூரம் கிராமம் அரசமரத்தெருவைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் கார்த்திக் பாலா (வயது 25). இவர், பாலுச்செட்டிசத்திரம் பஜாரில் இருசக்கர வாகனங்களுக்கான நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி 20 நாட்கள்தான் ஆகிறது.

நேற்று காலை புதுமாப்பிள்ளை கார்த்திக் பாலா, அங்குள்ள ஏரிக்கரையில் நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். இந்நிலையில் திடீரென பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது கார்த்திக் பாலாவை மின்னல் தாக்கியதில் அவர் அதே இடத்தில் சுருண்டு விழுந்து இறந்தார். திருமணமான 20 நாளில் புதுமாப்பிள்ளை இறந்த செய்தியை கேட்டதும் புதுமணப்பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுதொடர்பாக பாலுச்செட்டிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகில் உள்ள வளர்புரத்தைச் சேர்ந்தவர் காஞ்சனா. கணவரை இழந்த இவர், தனது மகள் மகாலட்சுமி (16) மற்றும் மகனுடன் வசித்து வந்தார். மகாலட்சுமி பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று காலை மகாலட்சுமி ஊருக்கு வெளியே உள்ள வயல் வெளிக்கு சென்றார்.

அந்தநேரத்தில் திடீரென பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது மகாலட்சுமி மின்னல் தாக்கி துடிதுடித்து இறந்தார். இதுபற்றி திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதேபோல், கும்மிடிப்பூண்டியை அடுத்த மாதர்பாக்கம் அருகே உள்ள நேமலூர், தாத்தையார் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சந்திரன்(60). தனது வீட்டின் வெளியே இருந்த வைக்கோல் போரை பாலீத்தின் கவர் போட்டு மூடுவதற்காக வெளியே வந்தார். அப்போது மின்னல் தாக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இடி, மின்னலுடன் பலத்த காற்றுடன் மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதற்கிடையே திண்டுக்கல் ஒன்றியம் அடியனூத்து அருகேயுள்ள கொல்ராம்பட்டியில் மின்னல் தாக்கியதில் லட்சுமி (38) என்ற பெண் பலியானார். மேலும் 2 பெண்கள் காயம் அடைந்தனர்.

சென்னை எண்ணூர் சத்தியவாணி முத்துநகர் 12-வது தெரு தெருவைச் சேர்ந்தவர் செல்வின் (49). இரும்பு வியாபாரி. இவர் நேற்று அதிகாலை, பால் வாங்குவதற்காக அருகில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. பின்னர் அவர் கடை உரிமையாளர் மாதவன்(48) என்பவருடன் சேர்ந்து கடையின் ஷட்டரை தூக்க முயன்றார்.

ஏற்கனவே மழை நீர் பட்டு ஈரமாக இருந்த ஷட்டரில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இது தெரியாமல் ஷட்டரை தொட்ட 2 பேரும் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டனர். இதில் செல்வின் பலியானார். மாதவன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அதேபோல கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் அருகே உள்ள தண்டலம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆரோக்கியசாமி(55) வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது தரையில் கிடந்த மின்வயரில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் அவர் பரிதாபமாக இறந்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் 30 வீடுகளின் மேற்கூரைகள் சேத மடைந்தன. அதேபோல் தோட்டங்களில் மின்கம்பங் களும் ஆங்காங்கே முறிந்து விழுந்தன.

மேலும், மாவட்டம் முழுவதும் சுமார் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த வாழைகள் மற்றும் 2 ஆயிரம் பப்பாளி மரங்கள் முறிந்து சேதம் அடைந்தன.

Similar News