செய்திகள்
காஞ்சிபுரத்தில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க இருசக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே செல்ல அனுமதி
அத்தியாவசிய பொருட்கள் வாங்க இருசக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே செல்லவேண்டும் என்று காஞ்சிபுரம் போலீசார் அறிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம்:
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்பவர்கள் தவிர மற்றவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும் பொதுமக்கள் தடையை மீறி இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிகிறார்கள். அனாவசியமாக சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்வதுடன், நூதன தண்டனைகளையும் வழங்கி எச்சரித்து வருகின்றனர்.
ஆனாலும் பொதுமக்கள் சிலர் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்வதாக கூறி இருசக்கர வாகனங்களில் 2 பேர் என வெளியே சுற்றி திரிகிறார்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இவ்வாறு அதிகளவில் அத்தியாவசிய பொருட்கள் கடைகளில் கூட்டம் கூடுகின்றனர்.
இதையடுத்து போலீசார், இதுபோன்று வரும் பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த இனிமேல் இருசக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே செல்லவேண்டும். மீறி இருசக்கர வாகனத்தில் 2 பேர் பயணம் செய்தால், அந்த இருசக்கர வானம் பறிமுதல் செய்யப்படும் என அறிவித்து உள்ளனர்.
அதன்படி நேற்று காஞ்சீபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மார்க்கெட் பகுதிகளுக்கு இருசக்கர வாகனங்களில் 2 பேராக வந்தவர்களை போலீசார் நிறுத்தி ஒருவரை வாகனத்தில் இருந்து இறக்கிவிட்டு ஒருவர் மட்டுமே மார்க்கெட் உள்ளே செல்ல அனுமதித்தனர். இதனால் மார்க்கெட் பகுதியில் கூட்டம் சற்று குறைவாக காணப்பட்டது. மேலும் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம், மூங்கில் மண்டபம் பகுதியில் 2 பேராக சென்றவர்களின் இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.