செய்திகள்
தமிழக அரசு

தமிழக  அரசுக்கு ரூ.10 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு

Published On 2020-04-10 08:33 GMT   |   Update On 2020-04-10 08:33 GMT
ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழக அரசுக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிதி நெருக்கடியை அரசு எப்படி சமாளிக்கப் போகிறது? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
சென்னை:

கொரோனா வைரஸ் பரவியதன் காரணமாக உலக நாடுகளின் பொருளாதாரமே ஸ்தம்பித்து உள்ளது. இதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல.

ஊரடங்கு உத்தரவு காரணமாக நிறுவனங்கள் அனைத்தும் மூடிக்கிடப்பதால் தனியாருக்கு கிடைத்து வந்த வருமானம் முற்றிலும் நின்று விட்டது.

இதே போல் ஒவ்வொரு மாநிலத்திலும் அரசுக்கு கிடைத்து வந்த வரி வருவாய் தற்போது கிடைக்காத சூழல் உருவாகி விட்டது.

தமிழகத்தை பொறுத்தவரை வணிக வரித்துறை, மது விலக்கு ஆயத்தீர்வைத் துறை, பத்திரப்பதிவு துறை ஆகியவற்றின் மூலம் அரசுக்கு அதிக வருவாய் கிடைத்து வந்தது.

தமிழ்நாட்டில் 5 ஆயிரத்து 292 மதுக்கடைகள் உள்ளன. இந்த கடைகளின் மூலம் மாதம் ரூ.2,500 கோடிக்கு மேல் அரசுக்கு வருவாய் கிடைத்து வந்தது.

தற்போது மதுக்கடைகள் அனைத்தும் மூடிக்கிடப்பதால் அரசுக்கு கிடைத்து வந்த வருவாய் முற்றிலும் நின்று விட்டது. மதுபான தொழிற்சாலைகளும் மூடிக்கிடப்பதால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மதுக்கடைக்கு அடுத்தபடியாக பத்திரப்பதிவு துறை மூலம் அரசுக்கு ஏராளமான வருவாய் கிடைத்து வந்தது. தமிழ்நாட்டில் 600-க்கும் மேற்பட்ட சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன.

இங்கு தினசரி ஆயிரக்கணக்கில் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு வந்தன. சொத்து பரிமாற்றம், புதிய சொத்துக்கள், வீடுகள் ஆகியவற்றை பதிவு செய்தல், ஆவணங்களை பதிவு செய்தல், அறக்கட்டளை தொண்டு நிறுவனங்கள், சீட்டு, நிதி நிறுவனங்கள், பிறப்பு - இறப்பு பதிவுகள் ஆகியவை பத்திரப்பதிவு துறையில் நடந்து வரும்.

இதன் மூலம் அரசுக்கு மாதம் தோறும் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் கிடைத்து வந்தது. இப்போது பத்திரப்பதிவு நடைபெறாததால் அதன் மூலம் கிடைத்து வந்த வரி வருவாய் நின்று விட்டது.

வணிக நிறுவனங்கள் மூலம் அரசுக்கு ஒரு கணிசமான வருவாய் கிடைத்து வந்தது. பெரிய பெரிய நிறுவனங்கள் அனைத்தும் மூடி கிடப்பதால் இந்த துறையின் மூலம் அரசுக்கு கிடைத்த ரூ.2,500 கோடிக்கு மேல் வருவாய் வராமல் நின்று விட்டது.

இது தவிர பல்வேறு துறைகளின் சார்பில் ரூ. 2,500 கோடிக்கு மேல் அரசுக்கு கிடைத்து வந்த வருவாய் நின்று விட்டது.

இதனால் இந்த மாதம் தமிழக அரசுக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிதி நெருக்கடியை அரசு எப்படி சமாளிக்கப் போகிறது? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

தற்போது கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளையும், சலுகைகளையும் அரசு வழங்கி வருவதால் மேலும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு போதிய அளவு நிதி வழங்கினால்தான் அரசுக்கு உதவியாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Tags:    

Similar News