செய்திகள்
கலெக்டர் ஜெயகாந்தன்

வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்- கலெக்டர் வலியுறுத்தல்

Published On 2020-03-25 11:13 GMT   |   Update On 2020-03-25 11:13 GMT
வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று சிவகங்கை கலெக்டர் வலியுறுத்தியுள்ளார்.
சிவகங்கை:

சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது குறித்து தமிழக அரசு பல்வேறு கட்ட பணிகளை மேற்கொண்டு செயல்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்புகள் எதுவும் இல்லை.

இருந்தபோதிலும் வருங்காலங்களிலும் இந்த வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, கிராமப்பகுதிகளை முழுமையாக கண்காணிக்க வேண்டும் என்ற அடிப்படையில் பொதுசுகாதாரத்துறையுடன் வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணைந்து செயல்பட்டு வரும் நிலையில் அங்கன்வாடி பணியாளர்களும் இணைந்து செயல்பட வேண்டும்.

குறிப்பாக வெளிநாட்டிற்கு பணிக்கு சென்றவர்களில் அதிகமானவர்கள் கிராம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் வருகை குறித்து அங்கு வசிக்கும் உங்களை போன்ற பணியாளர்களுக்குத்தான் நன்றாக தெரியும்.

அவ்வாறு வெளிநாட்டிலிருந்து மார்ச் 1-ந்தேதிக்கு பிறகு வந்தவர்கள் பதிவு செய்தவர்கள் போக மீதமுள்ளவர்கள் யாரேனும் இருந்தால் உடனடியாக அருகாமையிலுள்ள சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு தெரிவித்து பதிவு செய்ய வேண்டும்.

மேலும், அவ்வாறு வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்பதை கண்டறிந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்க ஏதுவாக அவர்கள் வீட்டின் முகப்பில் ஸ்டிக்கர் ஒட்டப்படும். ஸ்டிக்கர் ஒட்டப்பட்டவுடன் அந்த வீட்டு நபர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. இதன் நோக்கம் எல்லோரையும் பாதுகாக்க வேண்டும் என்பதேயாகும்.

பொதுவாக வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தாலும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். வெளியில் இருந்து வந்த நபர்களுக்கு 14 நாட்களுக்கு பிறகுதான் அதன் அறிகுறி தெரியும். எனவே பாதுகாப்பு நலன் கருதி தனிமைப்படுத்துவதை பொருட்படுத்தாமல் ஒத்துழைப்பு கொடுத்து எல்லா பரிசோதனை செய்து ஒவ்வொரையும் பாதுகாத்து கொள்ள வேண்டும்.

இந்த வைரஸ் ஒருவருக்கு இருந்தால் அடுத்தவருக்கு எளிதாக பரவும் என்பதால் அரசு வழங்கும் விதிமுறைகளை கடைப்பிடித்து சுகாதார முறைகளை பின்பற்றி செயல்பட்டு ஒவ்வொருவரும் வைரஸ் தாக்குதலிருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும். யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News