செய்திகள்
கோப்புப்படம்

சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் 100 படுக்கைகளுடன் தயார் நிலையில் மருத்துவ வசதி- கலெக்டர் தகவல்

Published On 2020-03-24 18:10 IST   |   Update On 2020-03-24 18:10:00 IST
சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் 100 படுக்கைகளுடன் தயார் நிலையில் மருத்துவ வசதி உள்ளதாக கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு கிடையாது. மேலும் வராமல் இருக்க பொதுமக்கள் போதிய ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மத்திய-மாநில அரசு அறிவுரையின்படி வருகிற 31-ந்தேதி வரை பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். கூடுமானவரை வீட்டிலேயே இருப்பது நல்லது.

அதேபோல் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள பொது மக்கள் தங்கள் பகுதிகளில் யாரேனும் வெளிநாட்டில் இருந்து வந்தால் உடனடியாக வருவாய்துறை அல்லது சுகாதாரத்துறை பணியாளரிடம் பதிவு செய்ய அறிவுறுத்த வேண்டும்.

அதேபோல் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். வெளிநாட்டில் இருந்து வந்த அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருக்கும் என்ற நிலை இல்லை. இருந்தபோதிலும் மருத்துவ பரிசோதனை என்பது தன்னை பாதுகாத்துக்கொள்ள மட்டுமின்றி உறவினர்களையும் பாதுகாத்துக்கொள்ள பயனுள்ளதாக இருக்கும்.

சிவகங்கை மாவட்டம் முழுவதும் முழுமையாக கண்காணிக்கப்பட்டு அதிக அளவில் பொதுமக்கள் கூடாத வண்ணம் பார்த்துக் கொள்வதுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு 24 மணி நேரமும் மருத்துவக்குழு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பொதுமக்கள் ஏதேனும் தகவல் தெரிவிக்க விரும்பினால் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.

அதேபோல் காய்ச்சல் போன்ற அறிகுறி உள்ளவர்கள் அரசு வாகனங்களில் வராமல் சுகாதாரத்துறை பணியாளருக்கு தெரிவித்து 108 வாகனம் மூலம் வரவேண்டும்.

பொதுவாக இரண்டு வார காலத்திற்கு அவரவர் சொந்த வாகனங்களில் பயணிப்பது மிக நன்று. மருத்துவத்துறையின் மூலம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி தலைமை மருத்துவமனையில் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவ வசதிகள் தயார் நிலையில் உள்ளது.

மேலும் காரைக்குடி, தேவகோட்டை மற்றும் சிவகங்கை நகர் பகுதிகளில் புதிய கட்டிடங்கள் கண்டறிந்து தேவைக்கு ஏற்ப மருத்துவ சிகிச்சைக்கான படுக்கை வசதிகள் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

தற்போது வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பேரூராட்சித்துறை, நகராட்சித்துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து தங்கள் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் தூய்மை பணிகளை மேற்கொள்வதுடன் பொதுமக்களின் சரா சரி நிலைமையும் கண்காணித்து காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனுக்குடன் மருத்துவக்குழுவிற்கு தெரிவித்து உரிய சிகிச்சை வழங்க உறுதுணையாக இருக்க வேண்டும்.

அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாவட்டமாக உருவாக்க முடியும். அதற்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

அதேபோல் பொதுமக்கள் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் தினந்தோறும் வெந்நீர் குடிக்க வேண்டும். முடிந்த அளவு வயதுக்கு ஏற்றாற்போல் மூச்சுப்பயிற்சி செய்து கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகம் முழு தயார் நிலையில் உள்ளது. யாரும் அச்சப்பட தேவையில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் யசோதா மணி, மகளிர் திட்ட அலுவலர் அருண்மணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், வருவாய் கோட்டாட்சியர்கள் சுரேந்திரன் (தேவகோட்டை), சிந்து (சிவகங்கை), கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமபிரதீபன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News