செய்திகள்
தற்கொலை

கடன் தொல்லையால் பஞ்சாயத்து தலைவரின் கணவர் தற்கொலை

Published On 2020-03-23 09:59 GMT   |   Update On 2020-03-23 09:59 GMT
கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் அருகே கடன் தொல்லையால் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேத்தியாத்தோப்பு:

கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஒன்றியம் பூதங்குடி ஊராட்சி அள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராசு (வயது 45). இவரது மனைவி ஜெயா (40). இவர் பூதங்குடி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

ஒரு மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. 2 மகள்கள் படித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இன்று காலை 5 மணி அளவில் வீட்டில் எதிர்புறம் உள்ள ஒரு வேப்பமரத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் செல்வராசு தூக்கில் பிணமாக தொங்கினார்.

இது குறித்து சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ராமதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

தூக்கில் பிணமாக தொங்கிய செல்வராசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

செல்வராசு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து மரத்தில் தொங்க விட்டார்களா? என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் பஞ்சாயத்து தேர்தலில் தனது மனைவி ஜெயா வெற்றி பெறுவதற்காக செல்வராசு அதிக அளவு கடன் வாங்கியிருந்தார். அதை திருப்பி செலுத்த முடியாமல் தவித்தார். அதனால் ஏற்பட்ட மனஉளைச்சலில் செல்வராசு தற்கொலை செய்ததாக தெரியவந்தது.

ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News