செய்திகள்
பட்டுசேலை

கொரோனா எதிரொலி- காஞ்சிபுரத்தில் பட்டுசேலை விற்பனை பாதிப்பு

Published On 2020-03-19 09:04 GMT   |   Update On 2020-03-19 09:04 GMT
கொரோனா பீதி காரணமாக பட்டு சேலை விற்பனை கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பட்டு சேலை விற்பனையின் வீழ்ச்சி காரணமாக கோடிக்கணக்கான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் பட்டு உலகப்புகழ் பெற்றது. காஞ்சிபுரம் நகரில் அரசு மற்றும் தனியார் பட்டு ஜவுளி நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இங்கு தினந்தோறும் ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்து பட்டு சேலை வாங்கி செல்வது வழக்கம்.

காஞ்சிபுரம் காமராஜ் சாலை, நடுத்தெரு, காந்திரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமாக பட்டு சேலை விற்பனையகங்கள் உள்ளன. முகூர்த்த நாட்கள் மற்றும் சாதாரண நாட்களில் கோடிக்கணக்கில் பட்டு வர்த்தகம் நடைபெறும். இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்த்து வருகின்றனர். இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக காஞ்சிபுரத்திற்கு வரும் வெளிமாநில வியாபாரிகள், பொதுமக்கள் எண்ணிக்கை முற்றிலுமாக குறைந்துள்ளது.

இதனால் பட்டு சேலை விற்பனை கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பட்டு சேலை விற்பனையின் வீழ்ச்சி காரணமாக கோடிக்கணக்கான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து நடுத்தெருவில் இயங்கிவரும் பட்டு சேலை விற்பனையகத்தின் வியாபாரி ஒருவர் கூறும்போது, காஞ்சிபுரத்தில் தினந்தோறும் ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்காணோர் பட்டுசேலை வாங்கி செல்வர்.

தினந்தோறும் லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை ஆகும். முகூர்த்த நாட்களில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை ஆகும். கொரோனா பீதி காரணமாக கடந்த சில நாட்களாக விற்பனை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Tags:    

Similar News