செய்திகள்
முத்தரசன்

தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை- முத்தரசன்

Published On 2020-03-13 11:40 GMT   |   Update On 2020-03-13 11:40 GMT
அரசியல் வெற்றிடம் எதுவும் தமிழகத்தை பொறுத்தவரை இல்லை என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
காரைக்குடி:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் காரைக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். தனது கட்சியில் மாற்று கட்சியினர் வந்து சேர்ந்தால் சட்டசபை தேர்தலில் 30 முதல் 35 சதவீதம் வாய்ப்பு அளிக்கப்படும் என்று அழைப்பு விடுக்கிறார்.

இது கட்சி தாவலை தூண்டுவதாகும். தனது அமைப்பில் திறமையானவர்கள் இல்லை என்பதை அவரே ஏற்றுக்கொள்கிறார்.

ரஜினிகாந்த் கட்சியை தொடங்கி அதன் கொள்கை என்ன என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

தேர்தல் நேரத்தில் கட்சிக்காக பணியாற்ற தேர்வு செய்யப்படுபவர்கள் கட்சி ஆட்சிக்கு வந்ததும் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார். கட்சி நல்ல முறையில் செயல்பட்டால் தானே ஆட்சி நீடிக்கும்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் ஏற்பதா? நிராகரிப்பதா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். ரஜினிகாந்த் தற்போது குழப்பத்தில் இருக்கிறார். அவரும் குழம்பி ரசிகர்களையும் குழப்பிக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் உள்ளது என்ற ஏற்க முடியாத கருத்தை ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அரசியல் வெற்றிடம் எதுவும் தமிழகத்தை பொறுத்தவரை இல்லை.

கொரோனா வைரஸ் குறித்து செல்போன்களில் வரும் விளம்பரம் அருவெறுக்கத்தக்கதாக உள்ளதால் அதனை உடனடியாக கைவிட வேண்டும்.

கொரோனா நோய் பாதிப்பு வி‌ஷயத்தில் தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை போதுமானதாக இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News