செய்திகள்
சிறுத்தை நடமாட்டம்

தாளவாடி அருகே மீண்டும் ஊருக்குள் புகுந்து சிறுத்தை அட்டகாசம்

Published On 2020-03-09 10:57 IST   |   Update On 2020-03-09 10:57:00 IST
சிறுத்தையை பிடிக்க கல்குவாரி, தோட்டம் என இரண்டு இடங்களில் கூண்டு வைத்தனர். ஆனால் கடந்த 4 மாதமாக சிறுத்தைகூண்டில் சிக்காமல் போக்குகாட்டி வருகிறது.

தாளவாடி:

ஈரோடு மாவட்டம் ஆசனூர் வனக்கோட்டம் தாளவாடி வனச்சரகத்தில் ஏராளமான புலி-சிறுத்தை உள்ளன.

வனத்தில் இருந்து வெளியேறும் சிறுத்தை அவ்வப்போது கிராமத்துக்குள் புகுந்து ஆடு மாடுகளை வேட்டையாடி வருகிறது. அண்மையில் பீம்ராஜ்நகர்,சூசைபுரம், தொட்டகாஜனூர் பகுதியில் சிறுத்தை தோட்டத்திற்குள் புகுந்து 10 ஆடுகளையும் 12 நாய்களையும் வேட்டையாடியது. சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

பின்னர் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க கல்குவாரி, தோட்டம் என இரண்டு இடங்களில் கூண்டு வைத்தனர். ஆனால் கடந்த 4 மாதமாக சிறுத்தைகூண்டில் சிக்காமல் போக்குகாட்டி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி அடுத்த தொட்டகாஜனூர் கிராமத்தில் வெங்கட்ராமன் (51) என்பவர் ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். இன்று காலை தனது வீட்டின் முன் கட்டி வைத்திருந்த கன்று குட்டியை காணவில்லை என்று பல இடங்களில் தேடியுள்ளார். அப்போது தனது வீட்டில் இருந்து சாற்று தூரத்தில் புதர் மறைவில் தனது கன்று குட்டி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது பற்றி தாளவாடி வனத்துறைக்கு தகவல் அளித்தார். வனத்துறையினர் அங்கு பதிந்த கால் தடத்தை வைத்து சிறுத்தை தான் கன்று குட்டியை கடித்து கொன்றுள்ளது என்றனர்.

இதனால் அப்பகுதி மக்கள் பீதிஅடைந்துள்ளனர் கூண்டு வைத்தும் கடந்த 4 மாதமாக கூண்டில் சிக்காமல் சிறுத்தை போக்குகாட்டிவருவதால் அட்டகாசம் செய்துவரும் சிறுத்தையை பிடிக்க முடியாமல் வனத்துறையினரும் திணறிவருகின்றனர்.

Similar News