செய்திகள்
கடையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

விருத்தாசலத்தில் ஓட்டல், கடைகளில் சுகாதார அதிகாரிகள் ஆய்வு

Published On 2020-03-07 23:55 IST   |   Update On 2020-03-07 23:55:00 IST
விருத்தாசலத்தில் ஓட்டல், கடைகளில் சுகாதார அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
விருத்தாசலம்:

விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று (சனிக்கிழமை) தேரோட்டம் நடைபெற இருக்கிறது. இதையொட்டி நகர பகுதிகளில் உள்ள உணவு விடுதிகளில் சுகாதாரத்துறையினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

கோவிலை சுற்றிலும் உள்ள 4 கோட்டை வீதிகள் மற்றும் கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள ஓட்டல்களில் நகர துப்புரவு அலுவலர் குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் நாட்டுத்துரை, ராஜா கண்ணன், வீரமணி, கோவிந்தசாமி, மற்றும் நகராட்சி ஊழியர்கள் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, உணவு தரமாக சமைத்து நுகர்வோர்களுக்கு வழங்கப்படுகிறதா?, பாத்திரங்கள் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா?, சுகாதாரமான குடிநீர் வழங்கப்படுகிறதா? என்பதை உறுதி செய்தனர். மேலும் சுகாதாரமான உணவு வழங்குவது தொடர்பாக ஓட்டல் உரிமையாளர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்கினர்.

இதேபோல் விருத்தாசலம் நகர பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் தடையை மீறி விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளதா என்றும் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 25 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 15 கடைகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீசு வழங்கினர்.

Similar News