செய்திகள்
சிறுத்தை நடமாட்டம்

சத்தியமங்கலம் அருகே சிறுத்தை தாக்கி 3 ஆடுகள் பலி

Published On 2020-03-06 17:34 IST   |   Update On 2020-03-06 17:34:00 IST
சத்தியமங்கலம் பகுதியில் தொடர்ந்து அடுத்தடுத்து ஊருக்குள் புகுந்த சிறுத்தையால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு விலங்குகள் உள்ளன. இதில் யானை, மான், புலி, சிறுத்தை என பல்வேறு விலங்குகள் உள்ளன.

இந்நிலையில் நேற்று மாலை சத்தியமங்கலம் அடுத்துள்ள ஜல்லியூர் கிராமத்தில் பழனிச்சாமி என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில், சாலையில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகள் சத்தம் எழுப்பியுள்ளது. அப்போது சிறுத்தை ஒன்று தென்னை மரத் தோட்டம் ரோட்டை கடந்து செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பட்டிக்குள் சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் ஆடுகள் துடிதடித்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதில் சம்பவ இடத்திலேயே ஒரு ஆடு இறந்து விட்டது. மேலும் இரண்டு ஆட்டுக்குட்டிகள் சிறிது தொலைவில் இறந்து கிடந்துள்ளது.

பவானிசாகர் வனத்துறையினரிடம் தகவல் கூறியுள்ளனர். பவானிசாகர் வனச்சரகர் சரவணன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் தோட்டத்தை ஆய்வு செய்தனர்.

கால் தடங்களை ஆய்வு செய்து இது சிறுத்தை தான் என்று கூறினர். நேற்று இரவு முழுவதும் ரோந்து பணி மேற்கொண்டனர். பொதுமக்கள் யாரும் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தினர்.

சத்தியமங்கலம் பகுதியில் தொடர்ந்து அடுத்தடுத்து ஊருக்குள் புகுந்த சிறுத்தையால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். ஊருக்குள் புகுந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளனர்.

Similar News