செய்திகள்
மரணம்

விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி வாலிபர் பலி

Published On 2020-03-03 11:19 GMT   |   Update On 2020-03-03 11:19 GMT
பள்ளிகொண்டா அருகே விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
அணைக்கட்டு:

பள்ளிகொண்டா அருகே உள்ள பள்ளி குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மகாதேவன் (வயது 52). பூமலையில் இவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது.

இதில் கரும்பு, வேர்க்கடலை பயிரிட்டுள்ளார். இரவு நேரங்களில் மலையிலிருந்து வரும் காட்டு பன்றிகள் கீரிப்பிள்ளை உள்ளிட்ட விலங்குகள் விவசாய நிலத்திற்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன.

இதனை தடுக்க மகாதேவன் அனுமதி இல்லாமல் திருட்டுத்தனமாக விவசாய நிலத்தை சுற்றி மின்வேலி அமைத்தார்.

இந்த நிலையில் பள்ளிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த சரவணன் மகன் சந்தோஷ்குமார் (22) கூலித்தொழிலாளி. இன்று காலை பூமலையில் உள்ள அவரது விவசாய நிலத்திற்கு சென்றார். மகாதேவன் நிலத்தின் வழியாக சென்றபோது திருட்டுத்தனமாக வைத்திருந்த மின்வேலியில் சிக்கினார். அப்போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட சரவணன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இன்று காலை சரவணன் இறந்து கிடந்ததை கண்டு திடுக்கிட்ட அப்பகுதி பொதுமக்கள் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். கிராம நிர்வாக அலுவலர் ரஞ்சித்குமார் இதுபற்றி பள்ளிகொண்டா போலீசில் புகார் அளித்தார்.

இன்ஸ்பெக்டர் மனோன்மணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சந்தோஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அனுமதியின்றி மின்வேலி அமைத்த மகாதேவனை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  அனுமதியின்றி திருட்டுத்தனமாக மின் வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News