செய்திகள்
கார் கவிழ்ந்து கிடக்கும் காட்சி.

கடலூர் அருகே கார்கள் மோதல்- வாலிபர் உடல் நசுங்கி பலி

Published On 2020-01-29 11:59 GMT   |   Update On 2020-01-29 11:59 GMT
கடலூர் அருகே கார்கள் மோதிய விபத்தில் ரோட்டில் நின்ற வாலிபர் உடல் நசுங்கி பலியானார். அதிகாரிகள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

கடலூர்:

கடலூர் மாவட்ட சுரங்கத்துறை உதவி இயக்குனர் லலிதா. இவர் இன்று காலை காரில் கடலூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். காரை டிரைவர் ஓட்டினார். இந்த கார் கடலூர் அருகே அன்னவல்லி பகுதியில் சென்று கொண்டிருந்தது.

அப்போது வடலூரில் இருந்து கடலூர் நோக்கி வேளாண்துறை உதவி இயக்குனர் பார்த்தசாரதி என்பவர் காரில் வந்தார்.

அந்த சமயம் முன்னால் சென்ற வாகனத்தை முந்தும்போது கண் இமைக்கும் நேரத்தில் இந்த கார் சுரங்கதுறை உதவி இயக்குனர் சென்ற கார்மீது பக்கவாட்டில் வேகமாக உரசியது. இதில் நிலை தடுமாறி சுரங்கத்துறை உதவி இயக்குனர் லலிதாவின் கார் சாலையில் உருண்டு சென்றது.

அப்போது அந்த பகுதியில் அன்னவல்லி பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சாலை ஓரம் நின்று பேசிகொண்டிருந்தனர். கார் உருண்டு வருவதை பார்த்து அவர்கள் அங்கிருந்து விலக முயன்றனர். ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் உருண்டு வந்தகார் இவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் அன்னவல்லி பகுதியை சேர்ந்த வீரமுத்து என்பவர் காருக்கு அடியில் சிக்கி பலியானார்.

இந்த விபத்தில் அதேபகுதியை சேர்ந்த பால்ராஜ் (27), அஜித் (25), சத்தியமூர்ததி (24), அசோக் (24), ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இவர்கள் சாலையில் அங்கும் இங்குமாக கிடந்தனர்.

இதேபோல் இந்த விபத்தில் உதவி இயக்குனர் லலிதா, லலிதாவின் கார் டிரைவர் ஆகியோரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடினார்கள்.

இதற்கிடையில் அதிகாரி லலிதாவி கார் மீது உரசிய வேளாண் உதவி இயக்குனர் பார்த்தசாரதியின் கார் திடீர்ரென “லாக்”ஆனது இதனால் அவர் படுகாயத்துடன் கூச்சல் போட்டார். இதனை அறிந்த ஏராளமான கிராம மக்கள் அங்கு திரண்டனர்.

அவர்கள் கார் கண்ணாடிகளை உடைத்து பார்த்த சாரதியை மீட்டனர். படுகாயம் அடைந்த அதிகாரிகள் உள்பட 7 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ்வேன் மூலம் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News