செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

வேப்பூரில் ஒரேநாளில் 3 வீடுகளில் கதவுகளை உடைத்து கொள்ளை

Published On 2020-01-29 12:28 IST   |   Update On 2020-01-29 12:28:00 IST
வேப்பூரில் ஒரேநாளில் 3 வீடுகளில் கதவுகளை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேப்பூர்:

கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 60). பத்திரங்கள் விற்பனை செய்து வருகிறார்.

நேற்று இரவு கண்ணனும் அவரது மனைவியும் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டனர்.

இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் சிலர் நள்ளிரவில் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளையடித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

பின்னர் அவர்கள் அருகில் வசித்து வந்த விவசாயி ராஜா (40) என்பவர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் பீரோவில் இருந்த நகை பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இதேபோல் வேப்பூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி இவரது மனைவி லதா (வயது 50). இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று இருந்தார். இவரது வீட்டிலும் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கண்ணன் , ராஜா மற்றும் லதா ஆகியோரின் வீட்டு கதவுகள் திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவர்கள் இது குறித்து வீட்டின் உரிமையாளருக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வேப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த வீடுகளை பார்வையிட்டு அங்கிருந்த பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். 3 வீடுகளிலும் கொள்ளை போன நகை பணத்தின் மதிப்பு தெரியவில்லை.

3 வீடுகளின் கதவுகளை உடைத்து பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். ஒரே நாள் இரவில் 3 வீடுகளில் கொள்ளை நடந்த சம்பவம் அந்த பகுதி பொதுமக்களுக்கிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News