செய்திகள்
உடையார்பாளையத்தில் சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்ற போது எடுத்த படம்.

சாலை பாதுகாப்பு வாரவிழா - அரியலூரை விபத்தில்லா மாவட்டமாக்க டிரைவர்கள் ஒத்துழைக்க வேண்டும்

Published On 2020-01-22 17:47 GMT   |   Update On 2020-01-22 17:47 GMT
அரியலூரை விபத்தில்லா மாவட்டமாக்க டிரைவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று சாலை பாதுகாப்பு வாரவிழாவில் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் வட்டார போக்குவரத்துத்துறை சார்பில் 31-வது சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று அரியலூர் பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலையில் இருந்து சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி, பள்ளி மாணவ- மாணவிகள், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் மற்றும் காவல்துறையினர், ஊர் காவல் படையினர், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், மாவட்ட கலெக்டர் ரத்னா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களுக்கு ரோஜாப்பூ கொடுத்து ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அரியலூர் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு வாரம் கடந்த 20-ந் தேதி முதல் வருகிற 27-ந் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை பாதுகாப்பு வார விழாவானது சாலை பாதுகாப்பு- உயிரின் பாதுகாப்பு, ஹெல்மெட் உயிர் கவசம் என்ற கருப்பொருளை மையப்படுத்தி தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. இவ்வார விழாவினை முன்னிட்டு, நாள்தோறும் பொதுமக்களிடம் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அரியலூர் மாவட்டத்தில் இயங்கும் சிமெண்டு தொழிற்சாலைகளில், பணிபுரியும் டிரைவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி வாகன டிரைவர்கள், அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் பிற வாகன டிரைவர்களுக்கு இலவச மருத்துவ உடல் பரிசோதனை மற்றும் கண்பரி சோதனை முகாம் நடத்துதல். கல்லூரி மற்றும் பள்ளிகளில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி போன்ற பல்வேறு விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அரியலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வினியோகித்தல். வாகனத்தின் பின்புறங்களில் சிவப்பு நிற பிரதிபலிப்பான்கள் ஓட்டுதல் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வாகனங்கள் தடம் மாறுதல், அதிக பாரம் ஏற்றுதல் வாகனத்தினை முந்தி செல்லும்போது கவனிக்க வேண்டிய நடைமுறைகள் சம்பந்தமான அறிவுரைகள் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இரவில் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டுநர்களுக்கு தேநீர் வழங்கி சாலைபாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

விபத்து முதலுதவி குறித்து அவசரகால ஊர்தி 108 பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு மீட்பு துறை பணியாளர்கள் மூலம் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு செயல் விளக்கம் அளிக்கப்படவுள்ளது.

இச்சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு அனைவரும் வாகனங்களை நல்ல முறையில் பராமரிப்பு செய்து விபத்தில்லா மாவட்டமாக அரியலூர் மாவட்டத்தை மாற்றிட அனைத்து டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இதில் கோட்டாட்சியர் பாலாஜி, வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன், மாவட்ட ஊராட்சி தலைவர் சந்திரசேகர், ஒன்றியக்குழு தலைவர் செந்தமிழ்செல்வி, துணை தலைவர் சரஸ்வதி, மோட்டார் ஆய்வாளர் சரவணபவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் உடையார்பாளையத்தில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தொடங்கி வைத்தார். இதில் உடையார்பாளையம் அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் நவுபல் மெட்ரிக் பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். வெள்ளபிள்ளையார் கோவிலில் இருந்து தொடங்கிய இந்த விழிப்புணர்வு ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று உடையார்பாளையம் பஸ் நிறுத்ததில் முடிவடைந்தது. இதில் ஓட்டுனர் பயிற்சி நிலைய உரிமையாளர்கள் கண்ணபிரான், அரவிந்த், சிவராஜ் மற்றும் நவுபல் மெட்ரிக் பள்ளி தாளாளர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News