செய்திகள்
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வாக்களித்த போது எடுத்த படம்.

முடிந்தால் எங்கள் குடும்பத்தினரை கைது செய்து பாருங்கள்- கே.எஸ்.அழகிரி சவால்

Published On 2019-12-30 07:18 GMT   |   Update On 2019-12-30 07:18 GMT
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கோலம் போட்டுள்ளதால் தன்னையும், தனது குடும்பத்தினரையும் முடிந்தால் போலீஸ் கைது செய்யட்டும் என்று கே.எஸ்.அழகிரி சவால் விடுத்துள்ளார்.
கடலூர்:

தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்களிப்பதற்காக தனது சொந்த ஊரான கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கீரப்பாளையம் வந்தார். அங்கு அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடியில் தனது குடும்பத்தினருடன் இன்று வாக்களித்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னையில் நேற்று பெண்கள் கோலமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெண்கள் கோலமிடுவதும், அதில் அவர்கள் தங்களது கருத்துக்களை சொல்வதும் பெண்களின் சுதந்திரம். தனி மனிதனின் கருத்துக்கு தடை விதிப்பது நல்லதல்ல.


எனது சொந்த ஊரான கீரப்பாளையத்தில் எங்கள் வீட்டு வாசல் முன்பும் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து கோலம் போட்டுள்ளோம். முடிந்தால் என்னையும், எங்கள் குடும்பத்தினரையும் கைது செய்து பாருங்கள்.

போலீசார் தமிழக அரசுடன் இணைந்து செயல்படலாம். ஆனால் இதுபோன்று ஜனநாயக நாட்டில் எதிர்ப்பை தெரிவிப்பவர்களை யாரோ தூண்டுதலின் பேரில் தான் கைது செய்துள்ளார்கள்.

காவல்துறையினர் தங்களுக்குரிய கண்ணியத்தோடு நடந்து கொள்ள வேண்டும்.

இதேபோன்று தூத்துக்குடி சம்பவத்தில் துப்பாக்கி சூடு நடத்தியதற்கும் யார்? யார்? தூண்டுதலின்பேரில் நடந்தது என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.

உள்ளாட்சி தேர்தலில் அதிகார பலம், பண பலம் ஆகியவற்றை கொண்டு வாக்கு சேகரிக்கின்றனர். கிராமபுற பகுதிகளில் ஒரு வாக்குக்கு இவ்வளவு என்று விலை பேசப்படுகிறது.

இதுபோன்று வரக்கூடாது என்று ஒரு வரைமுறை உள்ளது. மரபுகளை பின்பற்றாமல் வாக்கு சேகரிக்கின்றனர். இந்த தேர்தலில் பண நடமாட்டம் பகிரங்கமாக உள்ளது. ஆளுங்கட்சியினர் விதிகளை மீறி செயல்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News