செய்திகள்
புதுக்கோட்டை நியூ டைமண்ட் நகர் கிழக்கு பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ள காட்சி.

புதுக்கோட்டை நியூடைமண்ட் நகரில் அடிப்படை வசதிகள் இல்லாததால் அவதிப்படும் பொதுமக்கள்

Published On 2019-12-29 18:20 GMT   |   Update On 2019-12-29 18:20 GMT
புதுக்கோட்டை நியூடைமண்ட் நகரில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை நகராட்சி 42-வது வார்டுக்கு உட் பட்ட து நியூடைமண்ட் நகர் கிழக்கு பகுதி. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால் இந்த பகுதிக்கு இதுவரை மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. குறிப்பாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலின்போது சாய்ந்த மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றி ஆகியவை இதுவரை சீரமைக்கப்படாமல் உள்ளன.

புயலின்போது சாய்ந்த மின்கம்பங்கள் இதுவரை அகற்றப்படாமல் குடியிருப்பு பகுதியில் ஆங்காங்கே கிடக்கின்றன. சுமார் 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள், பயன்பாடின்றி காட்சி பொருளாக உள்ளன. இதேபோல் நியூடைமண்ட் நகர் கிழக்கு பகுதியில் தெருவிளக்கு வசதிகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் மதுப்பிரியர்கள் மது அருந்தும் திறந்தவெளி பாராக அப்பகுதி உள்ளது. அங்கு மது அருந்துபவர்கள் காலிபாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு செல்கின்றனர்.

குடிநீர் வசதி முற்றிலும் இல்லை. நகராட்சிக்கு உட்பட்ட பிறபகுதிகளில் காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்த பகுதிக்கு மட்டும் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள், வாகனங்களில் கொண்டு வரப்படும் குடிநீரை ஒரு குடம் 6 ரூபாய் என்ற விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல் கடந்த நவம்பர் மாதத்தின் இறுதியில் பெய்தமழையின் காரணமாக ஆங்காங்கே குளம்போல் மழைநீர் தேங்கி உள்ளது.

இந்த மழைநீர் 20 நாட்களுக்கு மேல் ஒரே இடத்தில் தேங்கி நிற்பதால், அதில் இருந்து துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. முறையான கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால், ஒவ்வொரு வீட்டின் அருகேயும், கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி உள்ளது. மேலும் அப்பகுதியில் குப்பைகளை சேகரித்து செல்ல, நகராட்சியின் சார்பில் பணியாளர்கள் வருவதில்லை. அப்பகுதியில் குப்பை தொட்டிகளும் வைக்கப்படவில்லை.

இதனால் அடிப்படை வசதிகளின்றி அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, புயலின்போது சேதமடைந்த மின்மாற்றியை உடனடியாக சீரமைக்க வேண்டும். மேலும் தெருவிளக்குகள் வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் குப்பைகளை பணியாளர்கள் சேகரித்து செல்லவும், குப்பை தொட்டிகளை வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் இது குறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறுகையில், நாங்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டிய வரிகளை முறையாக செலுத்தி வருகிறோம். ஆனால் எங்களுக்கு இதுவரை எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. குறிப்பாக தெருவிளக்கு வசதிகள் இல்லாததால், தினமும் சுமார் 20-க்கும் மேற்பட்டவர்கள் இரவு நேரங்களில் மது அருந்துவது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். குப்பை தொட்டிகள் இல்லாததால், நாங்களே சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று குப்பைகளை கொட்டி வருகிறோம். எனவே எங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும், என்றனர்.
Tags:    

Similar News