செய்திகள்
நூல்களுடன் மகாலிங்கம்

இவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை

Published On 2019-12-27 11:53 GMT   |   Update On 2019-12-27 11:53 GMT
'நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை' என்ற மூதுரைக்கு ஏற்ப வாழ்ந்து வரும் சைதாப்பேட்டை மகாலிங்கம் அவர்களின் சாதனையை இங்கு காண்போம்.
சென்னை:

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது முதுமொழி; நூலகம் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது புதுமொழி. 

இந்த புதுமொழிக்காக தனது வாழ்க்கையில் பல பத்தாண்டுகளை உழைத்துள்ளவர், சைதை மகாலிங்கம்.

சைதாப்பேட்டையில் காரணீஸ்வரர் கோயில் மிகவும் பிரபலம். இதற்கு ஈடாக கோயில் அமைந்துள்ள அதே தெருவில் கோயிலைப் போல் தனது நூலகத்தைப் பேணிப் போற்றி வளர்த்து வருபவர் மகாலிங்கம்.

நெசவாளர் குடும்பத்தில் பிறந்த மகாலிங்கம், காந்திய கொள்கையில் அதீத ஈடுபாடு கொண்டவர். ஒரு சமயம் தி.நகர் தக்கர்பாபா வித்யாலயாவுக்கு வந்திருந்த மகாத்மா காந்தியை நேரில் சந்தித்து புளகாங்கிதம் அடைந்தவர்.

அப்போது அவருக்கு உதித்த ஒரு சின்ன யோசனையின் விளைவே மகாத்மா காந்தி நூல் நிலையம். இந்த நூல் நிலையத்தை 1952-ம் ஆண்டு காரணீஸ்வரர் கோயில் அருகில் சின்னதாக ஆரம்பித்தார்.

முதலில் 200 புத்தகங்களுடன் ஆரம்பித்த சைதை மகாத்மா காந்தி நூல் நிலையத்தில் தற்போது 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட நூல்களை சேகரித்து வைத்துள்ளார்.

இவரது நூல்நிலையத்துக்கு உறுதுணையாக இருந்தவர்கள் பலர். அதில் முக்கிய தூணாக விளங்கியவர் சிறந்த வசனகர்த்தா மற்றும் கதாசிரியரான ’சக்தி’ கிருஷ்ணசாமி. 

வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய  ’சக்தி’ கிருஷ்ணசாமி, தனக்கு கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை நூலகத்துக்கு தொடர்ந்து அளித்து மகாலிங்கத்தை ஊக்குவித்து வந்தார்.

மகாலிங்கத்தின் அயராத உழைப்பை கண்டு வியந்த சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தற்போது நூலகத்துக்கு தேவையான உதவிகளை அளித்து வருகிறார்.



இவரது நூலகத்தில் உறுப்பினர் சந்தா மற்றும் மாதச் சந்தா மட்டும் வசூலித்து வருகிறார். தினமும் ஒரு புத்தகம் படித்து மறுநாள் கொடுத்து விடவேண்டும். இதற்கு நூலக உறுப்பினர்களும் நன்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர். 

மகாத்மா காந்தி நூலகத்தின் சிறப்புகளில் சிலவற்றை கீழே காணலாம்:

இங்குள்ள புத்தகங்களில் பெரும்பாலானவை அன்பளிப்பாக கிடைக்கப் பெற்றவை.

நூலகம் நடத்துவதுடன், சக்தி டி.கே.கிருஷ்ணசாமி அவர்களை நினைவுகூரும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் கவிஞர்களுக்கு சக்தி டி.கே.கிருஷ்ணசாமி பெயரில் விருது வழங்கி கவுரவித்து வருகிறார்.

மேலும், பத்தாவது, பன்னிரெண்டாவது தேர்வில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ஆண்டுதோறும் தலா 1000 மற்றும் 1500 ரூபாயும், கல்லூரியில் சேரும் ஏழை மாணவர்களுக்கு தலா 2000 ரூபாயும் வழங்கி வருகிறார்.

இதற்காக ஒவ்வொரு ஆண்டும் காந்தி ஜெயந்தியை ஒட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமையில் நூலகம் முன்பு மேடை அமைத்து, எழுத்தாளர்களுக்கு விருது வழங்குதல், மாணவ - மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல் ஆகியவற்றை இன்றளவும் சிறப்பாக செய்து வருகிறார்.

இவரது நூலகம் இரண்டு தலைமுறை எழுத்தாளர்களை கண்டுள்ளது. அக்காலத்தில் புகழ்பெற்ற நடிகர்கள், எழுத்தாளர்கள், வசனக்கர்த்தாக்கள் மற்றும் அவர்களின் தற்போதைய வாரிசுகள் வரை அனைவரையும் கண்ட பெருமை உடையது.

100 ஆண்டுகளுக்கு முந்தைய நூல்கள் முதல் தற்போதுள்ள நவீன எழுத்தாளர்களின் நாவல்களும் இந்நூலகத்தில் கிடைக்கின்றன.

தனக்கு கிடைத்த விருதுகள் மற்றும் பொற்கிழிகளையும் நூலக வளர்ச்சிக்காகவே செலவிடுவது சைதை மகாலிங்கம் வழக்கம். இவரது 3 மகன்களும் தந்தையின் தொண்டில் சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர்.

காந்தியாரைப் பார்க்க வேண்டும் என்றால் சைதாப்பேட்டை மகாத்மா காந்தி நூல் நிலையம் சென்று மகாலிங்கத்தை பாருங்கள் என நூல்நிலைய வருகை பதிவாளர் கையேட்டில் எழுதியுள்ள பிரபல எழுத்தாளர் பாக்கியம் ராமசாமியின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. 

இத்தனை அரிய சாதனைகளுக்கு சொந்தக்காரரான மகாலிங்கம் ஐயாவுக்கு 93 வயது என்பது குறிப்பிடத்தக்கது. 

எளிமையான தோற்றம், எப்போதுமே கைத்தறி ஆடைகளை அணிதல், செருப்பு போடாமல் வெறுங்காலால் நடப்பது, பேருந்து கிடைக்கவில்லை என்றால் தயங்காமல் நடந்தேச் செல்வது. நவீன தகவல் தொடர்பு யுகத்தில் செல்போன் பயன்படுத்தாதது என இவரது சிறப்பம்சங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். 

”நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை” என்ற அவ்வையாரின் மூதுரைக்கு ஏற்ப வாழ்ந்து வரும் சைதாப்பேட்டை மகாலிங்கம் அவர்களின் சாதனைப் பயணம் தொடர பிரார்த்தனை செய்வோம்.
Tags:    

Similar News