ஜோலார்பேட்டை அருகே 2 கோவில் உண்டியல் உடைத்து திருட்டு
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த மேட்டுசக்கர குப்பத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் கோவில் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்றிரவு கோவில் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இன்று காலை கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து ஊருக்குள் தகவல் பரவியதால் கோவில் முன்பாக ஏராளமானவர்கள் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருட்டு குறித்து கோவில் நிர்வாகி மணிகண்டன் ஜோலார்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் ஜோலார்பேட்டை அடுத்த பக்ரிதர்கா திருப்பத்தூர் மெயின் ரோட்டில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. நேற்றிரவு இந்த கோவிலுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் உண்டியலை உடைத்து பணத்தை எடுத்து சென்றுள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து 2 கோவில்களிலும் ஒரே கும்பல் கைவரிசை காட்டியதா? அல்லது வெவ்வேறு திருட்டு கும்பலா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று ஜோலார்பேட்டை தாமலேரி முத்தூரில் 2 டாஸ்மாக் கடைகளில் திருட்டு நடந்தது. இன்று மீண்டும் கோவில்களில் கொள்ளை கும்பல் கைவரிசை காட்டியுள்ளது தொடர் திருட்டால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.