செய்திகள்
பாதை வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

பாதைவசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு

Published On 2019-12-20 23:37 IST   |   Update On 2019-12-20 23:37:00 IST
கறம்பக்குடி அருகே பாதை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கறம்பக்குடி:

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கல்லாக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த ஆண்டான் தெரு கிராமம் உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அம்புக்கோவில் ஊராட்சி கண்டியன்பட்டியில் இருந்து ஆண்டான் தெரு கிராமத்துக்கு மண் சாலை இருந்தது. இதை நீண்டகாலமாக அப்பகுதி மக்கள் பயன் படுத்தி வந்தனர். இருப்பினும் அந்த சாலை தனிநபரின் பட்டா இடத்தில் செல்வதாக பிரச்சினை இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று முன் தினம் கண்டியன்பட்டியில் இருந்து ஆண்டான் தெருகிராமத்துக்கு சாலை அமைப்பதற்காக தனி நபரின் இடத்தில் கிராவல் மண் கொட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த நபரின் குடும்பத்தினர் பாதையில் முள்வேலியை போட்டு அடைத்தனர். இதனால் ஆண்டான் தெரு கிராமத்தில் இருந்து அம்புக்கோவில் மெயின் சாலைக்கு வருவதற்கு பாதை இல்லாமல் போனது.

இதனால் ஆத்திரமடைந்த ஆண்டான் தெரு கிராம பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தாங்கள் கிராமத்திற்கு பாதை வசதி கேட்டு நேற்று அம்புக்கோவில் பஸ் நிறுத்தம் அருகே கந்தர்வகோட்டை, தஞ்சாவூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிர மணியன், கந்தர்வகோட்டை இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உள்ளாட்சி தேர்தல் நிறைவடைந்தவுடன் கோட்டாட்சியர் தலைமையில் பிரச்சினைக்கு தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News