வேலூர் வசூர் மலையில் இளம்பெண் கொலை- மேலும் 4 பேரிடம் விசாரணை
வேலூர்:
வேலூர் அடுத்த அரியூர் குப்பத்தை சேர்ந்த சரவணன் மகள் நிவேதா (வயது17). பிளஸ்-2 படித்த இவர் வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் உள்ள கேன்டீனில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 14-ந்தேதி பைக்கில் வேலைக்கு சென்ற நிவேதா மாயமானார். இதுபற்றி வடக்கு போலீஸ் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர். காணாமல் போன அன்று காலை 11 மணிக்கு அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
மேலும் நிவேதாவின் இடதுகை பெரு விரலில் ஸ்டார், வலது கையில் பறவை இறக்கை பச்சை குத்தி இருந்ததாக கூறியுள்ளனர்.
இந்த நிலையில் புதுவசூர் மலையில் உள்ள கல்குவாரியில் நிவேதா பிணமாக கிடந்தார். அவரது கைகளில் இருந்த பச்சை அடையாளங்கள் மூலம் நிவேதா என்பது உறுதிசெய்யப்பட்டது.
சம்பவ இடத்தில் நிவேதாவின் செல்போன், பைகள் இல்லை. அதனை மர்ம நபர்கள் எடுத்து சென்றிருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
நிவேதா கொணவட்டத்தை சேர்ந்த வாலிபருடன் கடந்த சில மாதங்களாக பழகி வந்துள்ளார். இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர். இந்த நிலையில் நிவேதா கேன்டீனில் வேலை செய்தபோது மருத்துவ மனையில் உதவியாளராக பணிபுரிந்து வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
2 வாலிபர்களும் நிவேதாவை காதலித்து வந்துள்ளனர். காதல் தகராறில் நிவேதா கொலை செய்யப்பட்டி ருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரை காதலித்த 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் நிவேதாவின் செல்போனில் அதிகம் பேசியவர்கள் யார்? வாட்ஸ் அப் நண்பர்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
அவரது பைக் சி.எம்.சி. ஆஸ்பத்திரில் மீட்கப்பட்டது. மேலும் அவரது செல்போன் மாயமாகி உள்ளது. அதனை கொலையாளிகள் எடுத்து சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த நிலையில் தனிப்படை போலீசார் ரங்காபுரம், மூலக்கொல்லை பகுதியை சேர்ந்த 4 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து வருகின்றனர். இதனால் சத்துவாச்சாரியில் பரபரப்பபு ஏற்பட்டுள்ளது.