செய்திகள்
ஆற்காடு ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய 2 பெண் உள்பட 3 பேர் கைது
பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய 2 பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆற்காடு:
ஆற்காடு புதுத்தெருவை சேர்ந்தவர் வைரம் ராஜா (எ) ராஜேந்திரன் (வயது 59). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
கடந்த 9-ந் தேதி ராஜாவை 2 பெண்கள் உள்பட 7 பேர் கும்பல் கடத்தி சென்றது. வெளியில் சென்ற கணவர் ராஜா வீடு திரும்பாததால் அவரது மனைவி ரமாதேவி ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார்.
இந்நிலையில் கடந்த 11-ந் தேதி வீட்டுக்கு வந்த ராஜா மனைவியிடம் தன்னை சிலர் கடத்தி சென்று விட்டதாக நடந்த சம்பவங்களை கூறியதுடன் போலீசிலும் புகார் செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஆற்காடு அடுத்த வேப்பூரை சேர்ந்த ராஜாவின் நண்பரான தணிகைவேல் (47) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
ராஜாவுக்கு தணிகைவேல் ரூ.2.10 லட்சமும், தணிகைவேலின் நண்பர் ஆம்பூர் அருண் (30). ரூ.5 லட்சமும் தர வேண்டும். ராஜா தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் ராஜாவை கடத்தி பணம் கேட்டு மிரட்டலாம் என்று அருண் கொடுத்த ஐடியாவின் அடிப்படையில் கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றியதாக தணிகைவேல் போலீசாரிடம் தெரிவித்தார்.
அருண் அவர்களது நண்பர்களான 2 பெண்கள் உள்பட 7 பேர் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.
அதன்பேரில் போலீசார் விசாரணை செய்து நாட்றம்பள்ளி டோல்கேட் அருகே நின்றிருந்த திண்டுக்கலை சேர்ந்த உமாதேவி (40), ஜோதி (40) ஆகிய 2 பெண்களையும் கைது செய்தனர். மேலும் கடத்தல் சம்பவத்துக்கு மூளையாக இருந்த ஆம்பூர் அருண் உள்பட கூட்டாளிகள் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.