வேலூரில் தி.மு.க. ஆலோசனை கூட்டம்
வேலூர்:
வேலூர் மாவட்ட தி.மு.க. அவசர ஆலாசனை கூட்டம் வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. அவைத்தலைவர் முகமது சகி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., கதிர்ஆனந்த் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் சிறப்புரையாற்றினார்.
அவசர ஆலோசனை கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் சட்ட விதிகளை சரியாக பின்பற்றாமல் 9 மாவட்டங்கள் நீங்கலாக மீதமுள்ள மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி அதன் வாயிலாக உள்ளாட்சி நிதியை கபளீகரம் செய்ய துணிந்த அ.தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் வேலூர் மாவட்டம் உள்பட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி மன்ற தேர்தலை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்படி உடனே தேர்தல் நடத்த வேண்டும். நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி 4.5 புள்ளிகளுக்கு கீழே சரிந்து இந்திய பொருளாதாரம் தள்ளாடும் நிலைக்கு காரணமாக மத்திய அரசுக்கும், துணைபோகும் அ.தி.மு.க. அரசுக்கும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் வேலூர் மாவட்ட தி.மு.க.விற்கு உட்பட்ட அனைத்து அமைப்புகள் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.