செய்திகள்
அரசு கல்லூரி மாணவர்கள் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு- திருவண்ணாமலையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

Published On 2019-12-16 16:18 IST   |   Update On 2019-12-16 16:18:00 IST
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலையில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆற்காடு:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகர அனைத்து கட்சி அமைப்புகள், பல்வேறு தொண்டு நிறுவனங்கள், வியாபாரிகள் சார்பில் கத்தியவாடி சாலை அருகே இருந்து பேரணியாக சென்று தொலைதொடர்பு அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இதில் அனைத்து கட்சி நிர்வாகிகள், வியாபாரிகள், தொழிலதிபர்கள், முத்தவல்லிகள், ஜமாத் பொறுப்பாளர்கள், பொதுமக்கள் உள்பட சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பேரணியையொட்டி மேல்விஷாரத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கீதா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ஆம்பூர் பஸ் நிலையத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் நகர செயலாளர் பிர்தோஸ் அஹமத் தலைமையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.

அப்போது போலீசாருக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று காலை கல்லூரி முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷம் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டம் முடிந்ததும் மாணவர்கள் வகுப்புகளுக்கு சென்றனர்.

Similar News