செய்திகள்
சிறுத்தை அட்டகாசம்

சத்தியமங்கலம் அருகே மீண்டும் ஊருக்குள் புகுந்து சிறுத்தை அட்டகாசம்

Published On 2019-11-22 07:38 GMT   |   Update On 2019-11-22 07:38 GMT
சத்தியமங்கலம் அருகே மீண்டும் ஊருக்குள் சிறுத்தை புகுந்தால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் அருகே உள்ள புது குய்யனூர் கிராமம் வனப்பகுதியையொட்டி உள்ளது. இந்த ஊருக்குள் கடந்த 2 வாரத்துக்கு முன் ஒரு சிறுத்தை புகுந்தது.

வீட்டு தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த 2 ஆடுகளை அடுத்தடுத்து தின்று வேட்டையாடியது.

தொடர்ந்து 2 நாட்களாக வந்து ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கிராம மக்களின் வேண்டுகோளை ஏற்று வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்தனர். எதிர் பார்த்தப் படி சிறுத்தை கூண்டுக்குள் சிக்கியது.

பிடிப்பட்ட சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதியான தெங்குமரகடா செல்லும் வழியில் மங்கலப்பட்டி என்ற காட்டில் விட்டனர்.

அதன் பிறகு சிறுத்தையின் பீதியில் இருந்து புது குய்யனூர் கிராம மக்கள் நிம்மதியாக இருந்தனர்.

இந்த நிலையில் இப்போது அந்த கிராம மக்களை இன்னொரு சிறுத்தை பீதியில் உள்ளாக்கி உள்ளது.

புது குய்யனூரை சேர்ந்தவர் முத்துசாமி விவசாயி. இவரது வீட்டையொட்டி தோட்டம் உள்ளது. தோட்டத்தில் செண்டு மல்லி பயிரிட்டுள்ளார். நேற்று இரவு அவரது தோட்டத்துக்குள் புகுந்த ஒரு சிறுத்தை அங்கு கட்டப்பட்டிருந்த 2 ஆடுகளில் ஒரு ஆட்டை கயிற்றை அறுத்து கயிற்றுடன் தூக்கி சென்று விட்டது.

இன்று காலை தோட்டத்துக்கு வந்த பார்த்த விவசாயி முத்துசாமி ஆடு ஒன்று இல்லாததை கண்ட திடுக்கிட்டார். மேலும் அருகே சிறுத்தையின் கால் தடம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி தகவல் கிடைத்ததும் ஊர் மக்கள் அங்கு திரண்டனர். சிறுத்தை தூக்கி சென்ற ஆட்டை காட்டுக்குள் சிறிது தூரம் சென்று பார்த்தனர். ஆனால் ஆட்டின் உடலை காணவில்லை.

சம்பவ இடத்துக்கு வனத் துறையினரும் விரைந்து வந்து பார்வையிட்டனர். ஏற்கனவே இதே ஊருக்குள் புகுந்த சிறுத்தையை வனத் துறையினர் கூண்டு வைத்து பிடித்தது போல் இந்த சிறுத்தையையும் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டு கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News