செய்திகள்
உடைக்கப்பட்ட ஏ.டி.எம். எந்திரத்தை படத்தில் காணலாம்.

திட்டக்குடி அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

Published On 2019-10-29 12:32 GMT   |   Update On 2019-10-29 12:32 GMT
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா அலுவலகம் எதிரே உள்ள கனரா வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திட்டக்குடி:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா அலுவலகம் எதிரே கனரா வங்கி ஏ.டி.எம். உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தில் நேற்று மாலை ஊழியர்கள் பணத்தை நிரப்பிவிட்டு சென்றனர்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று இரவு அங்கு வந்தனர். அவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தனர். பின்னர் பணத்தை எடுக்க உடைக்க முயன்ற போது அவர்களது முயற்சி பலன் அளிக்கவில்லை. ஆட்கள் வருவதை அறிந்த அவர்கள் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இன்று காலை பணம் எடுக்க வந்த வாடிக்கை யாளர்கள் ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பார்த்தனர். ஏ.டி.எம். எந்திரத்தில் ரகசிய பாஸ்வேர்டு எண் உள்ளது. இதன் காரணமாக மர்ம நபர்களால் பணத்தை எடுக்க முடியவில்லை. இதனால் அதில் இருந்த பணம் தப்பியது.

இதுகுறித்து திட்டக்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் ஸ்ரீப்ரியா ஆகியோர் விரைந்தனர்.

ஏ.டி.எம். மையம் உள்ள இடம் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியாகும். எனவே கொள்ளையில் கைதேர்ந்த நபர்கள்தான் இதில் கைவரிசை காட்டி இருக்க முடியும். எனவே போலீசார் வழக்குபதிவு செய்து எந்திரத்தை உடைத்த மர்ம நபர்கள் யார்? எங்கு பதுக்கி உள்ளனர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கைரேகை நிபுணர்களும் கொள்ளையர்களின் ரேகையினை பதிவு செய்து துப்பு துலக்கி வருகிறார்கள். ஏ.டி.எம். மையத்தில் கண்காணிப்பு கேமிரா உள்ளது. இதில் பதிவாகி உள்ள தகவல்களை வைத்தும் போலீசார் தீவிரமாக கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். 

Tags:    

Similar News