செய்திகள்
கீழடியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார்.

கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்

Published On 2019-09-27 08:20 GMT   |   Update On 2019-09-27 08:20 GMT
உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தை கீழடியில் அமைக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

காரைக்குடி:

கீழடி அகழாய்வு இடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் 2600 ஆண்டுகள் பழமையானது. கி.மு. 6-ம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பது தெரிய வந்துள்ளது.

இவை தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்ப்பதாக உள்ளது. எனவே கீழடி அகழாய்வு இடத்தை பாதுகாக்கப்பட்டதாக அறிவிக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் இன்று விமானம் மூலம் மதுரை வந்தார். பின்னர் அங்கிருந்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடிக்கு சென்று அங்கு அகழாய்வு நடைபெற்ற இடத்தையும், கண்டெடுக்கப்பட்ட பொருட்களையும் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு எம்.பி.க்கள் கனிமொழி, வெங்கடேசன், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் டெல்லி சென்று தொல்லியில் துறை இணை அமைச்சரை சந்தித்து கீழடி பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அதே நேரத்தில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தை கீழடியில் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

இந்தியாவின் வரலாறு தமிழகத்தில் இருந்துதான் தொடங்கியுள்ளது என்பது பெருமையாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News