செய்திகள்
கீழடி அகழாய்வு

கீழடியில் 6-வது கட்ட அகழாய்வு விரைவில் தொடக்கம் - தொல்லியல் துறை தகவல்

Published On 2019-09-24 08:06 GMT   |   Update On 2019-09-24 08:06 GMT
கீழடியில் 6-வது கட்ட அகழாய்வு பணி விரைவில் தொடங்கும் என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது பழமையான தமிழர் நாகரிகத்தின் தொல்பொருட்கள் கண்டெக்கப்பட்டன. கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு 3 கட்டமாக அகழாய்வு பணி மேற்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் பூமிக்கடியில் புதையுண்டு இருந்த 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான 7,818 பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டது. 4-வது கட்ட அகழாய்வில் 5,820 தொல் பொருட்கள் கிடைத்தன.

இதையடுத்து தமிழர் நாகரீகத்தை மேலும் அறிய கீழடியில் விரிவான அகழாய்வு நடத்தப்பட வேண்டும் என அரசியல் கட்சியினர், தமிழ் ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 5-வது கட்ட அகழாய்வு பணி தொடங்கியது. இந்த ஆய்வின் மூலம் தமிழர் நாகரீகத்தின் பழமை குறித்து வியத்தகு தகவல்கள் தெரிய வந்தன.

கீழடியில் முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு, நீதி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட் டது.

இதில் இரட்டை மற்றும் வட்டச்சுவர், கால்வாய், தண்ணீர் தொட்டி, உறை கிணறுகள் போன்றவை கண்டறியப்பட்டன.

இதே போல மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், சுடுமண் சிற்பங்கள், செப்பு, வெள்ளி காசுகள், விசித்திர குறியீடுகள் போன்றவை கிடைத்தன.

இதனை ஆய்வு செய்து 2,600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இதுவரை உலகில் சிந்து சமவெளி நாகரீகம் பழமையானது என கருதப்பட்டு வந்த நிலையில் கீழடியில் கிடைத்த பொருட்கள் அந்த கருத்தை மாற்றியுள்ளது. கீழடி ஆய்வின் மூலம் உலகின் மூத்தக்குடி தமிழ்க்குடி என தெரியவந்துள்ளது.

சிந்து சமவெளி நாகரீகத்தை முந்திய அல்லது அதற்கு நிகரான நாகரீகத்தை கொண்டதாக கீழடி நகர நாகரீகம் விளங்கி இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தற்போது நடக்கும் 5-ம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்களை ஆவணப்படுத்தும் பணியில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். இந்த ஆய்வு பணி வருகிற 30-ந் தேதியுடன் முடிவடைகிறது.

இதனைத் தொடர்ந்து 6-வது கட்ட அகழாய்வு பணியை மேற்கொள்ள தொல்லியல் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இந்த முறை கீழடியை சுற்றியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் அகழாய்வு நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இதுவரை நடத்த கீழடி ஆய்வுகளின் முடிவுகள் வெளிவந்ததை தொடர்ந்து 6-ம் கட்ட அகழாய்வு பணி மீதான ஆர்வம் தமிழக மக்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News