செய்திகள்
அமைச்சர் செங்கோட்டையன் (கோப்புப்படம்)

காலாண்டு தேர்வு விடுமுறை ரத்து என்பது தவறான தகவல்- அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2019-09-17 05:06 GMT   |   Update On 2019-09-17 05:06 GMT
காலாண்டு தேர்வு விடுமுறை ரத்து என்பது தவறான தகவல் என்று ஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:

பெரியாரின் 141 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு பெரியார் நகர் வீதியில் உள்ள அண்ணா பெரியார் நினைவகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். எம்எல்ஏக்கள் கே.வி .ராமலிங்கம், கே.எஸ். தென்னரசு, சிவ சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

திராவிட இயக்கத்தின் வரலாற்றில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்றவர்களின் அரும்பணி காரணமாகவே திராவிட இயக்கம் தமிழ்நாட்டில் வேரூன்றி நிலைத்துக் கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் முதலமைச்சர் பல்வேறு பணிகளை தமிழகத்தில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

இந்த அரசு மக்களுக்குச் செய்கின்ற சேவைகள் இன்னும் மேலும் மேலும் தேவையான பணிகளை ஆற்றுவதற்கு இந்த நாளில் அத்தனை பேரும் சூளுரை ஏற்று பணிகளை மேற்கொண்டு இருக்கின்றோம்.

காலாண்டு தேர்வு விடுமுறை ரத்து என்பது தவறான தகவல். இந்த அரசின் சார்பாக அப்படிப்பட்ட நிலை எதுவும் இல்லை. பழைய முறையே தொடரும். ஏற்கனவே உள்ள நிலையில் தொடர்ந்து பள்ளிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கும்.

மத்திய அரசின் மூலமாக அண்ணல் காந்தியின் பிறந்த நாளை பள்ளி கல்வித்துறை மூலமாக நடைபெற வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில் பள்ளிகளில் விழா நடைபெறும். காந்திஜி பிறந்த நன்னாளில் விழாக்கள் எடுக்கப்படுமே தவிர வேறு எதுவும் இல்லை. பத்தாம் வகுப்பு மொழிப்பாடம் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. வேறு எந்த நிலைகளும் அதிரடி நடவடிக்கை பள்ளிக் கல்வித்துறையின் மூலமாக இல்லை தொடர்ந்து என்றைக்கும் உள்ள நிலையே தொடரும்.


மத்திய அரசால் கொண்டு வந்திருக்கின்ற அனைவருக்கும் கல்வி திட்டம் என்ற முறையில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு என்பது இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டிய ஒரு நிலை. நம் மாநிலத்திற்கு அந்த நிலையை மனதில் கொண்டுதான் 3 ஆண்டு காலத்திற்கு விதி விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் மூன்று ஆண்டு காலத்தில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்பு உருவாகி இருக்கிறது. மூன்றாண்டு காலத்திற்கு இதே நிலை தொடரும்.

அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு கல்லூரிகளில் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து கொள்கை முடிவு தான் எடுக்க வேண்டும். அதை நான் கூற முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News