செய்திகள்
நல்லசாமி

உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள் அனைவருக்கும் சுயேட்சை சின்னமே ஒதுக்க வேண்டும் - செ.நல்லசாமி

Published On 2019-08-31 05:18 GMT   |   Update On 2019-08-31 06:53 GMT
உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் அனைவருக்கும் சுயேட்சை சின்னங்களே ஒதுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகளின் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் செ.நல்லசாமி கூறியுள்ளார்.

ஈரோடு:

தமிழ்நாடு விவசாயிகளின் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் செ.நல்லசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உள்ளாட்சி அமைப்புகளான சிற்றூராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், மாவட்ட ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி போன்றவற்றில் கொள்கை முடிவு எடுக்கப்படுவதில்லை. மாறாக நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் எடுக்கப்படும் கொள்கை முடிவுகளை நடைமுறைப்படுத்தும் இடங்களே இவை. பொதுவாக சிறிய அலகுகளாக இருக்கும் இவைகளுக்கான தேர்தல் அரசியல் கட்சிகளின் தலையீடும், குறுக்கீடும், சின்னம் ஒதுக்கீடும் இல்லாமல் நடத்த வேண்டும்.

அப்போது தான் நல்லவர்கள், வல்லவர்கள், மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் பொறுப்புக்கு வர வாய்ப்பு கிடைக்கும். உள்ளாட்சி தேர்தல்கள் கட்சி அடிப்படையில் நடத்தப்பட்டால் இவர்களுக்கான வாய்ப்பு மறைமுகமாக மறுக்கப்படுவதாகவே இருக்கும். டெல்லியிலும், சென்னையில் இருந்து வார்டு வேட்பாளர் முதல், மாநகர மேயர் வேட்பாளர் வரை தேர்வு செய்து அறிவிப்பு வெளியிடுவது ஏற்புடையதாக இருக்காது. கால், வால் பிடிக்கும் கலாச் சாரத்துக்கு இது வழி வகுக்கும். உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் அனைவருக்கும் சுயேட்சை சின்னங்களே ஒதுக்க வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகள் ஜனநாயகத்தின் அடித்தளங்கள் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் எற்று நடத்துவதை போல உள்ளாட்சி தேர்தல்களையும் ஏற்று நடத்த வேண்டும். பதவி விலகும் குழு தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவிடம் தான் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டுமே தவிர இடையில் தனி அதிகாரி என்ற பேச்சுக்கே இடம் இருக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News