செய்திகள்
அத்தி வரதர்

அத்திவரதர் தரிசன காணிக்கை இதுவரை இத்தனை கோடியா?

Published On 2019-08-21 12:18 GMT   |   Update On 2019-08-21 12:18 GMT
அத்திவரதர் தரிசன பெருவிழாவில் பக்தர்களால் பல கோடி ரூபாய் காணிக்கையாக செலுத்தப்பட்ட நிலையில் மேலும் 5 உண்டியல்கள் எண்ணப்பட உள்ளது.
ஸ்ரீபெரும்புதூர்:

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் தரிசன பெருவிழா கடந்த ஜூலை 1-ந் தேதி தொடங்கி 48 நாட்கள் நடைபெற்றது.

ஜூலை 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை சயன கோலத்திலும், ஆகஸ்டு 1-ந் தேதி முதல் 17-ந் தேதி அதிகாலை வரை நின்ற கோலத்திலும் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளித்த அத்திவரதரை தரிசிக்க தமிழகம் முழுவதும் இருந்து மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சீபுரத்துக்கு திரண்டனர்.

அவ்வாறு திரண்டபக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து அத்திவரதரை தரிசித்து மகிழ்ந்தனர். காஞ்சீபுரத்தில் தினந்தோறும் திரண்ட லட்சக்கணக்கான பக்தர்களால் நகரம் முழுவதும் மக்கள் தலைகளாக காட்சி அளித்தது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி போயினர். எனினும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கூட்டத்தை ஒழுங்குபடுத்தியதால் அத்திவரதர் தரிசன விழா சிறப்பாக முடிந்தது.

அத்திவரதர் வைபவத்துக்காக பிரத்யேகமாக கோவிலின் உள்ளே 18 தற்காலிக உண்டியல் வைக்கப்பட்டு இருந்தன. நேற்றுவரை 18 உண்டியல்களில் 13 உண்டியல்கள் எண்ணப்பட்டன. இதில் ரூ.9.90 கோடி பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 5 உண்டியல்கள் எண்ணப்பட உள்ளது.

வைக்கப்பட்ட 18 உண்டியல்கள் 3 சுற்று என்ற அளவில் சுமார் 50 முறை எண்ணப்பட்டதாக கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் தெரிவித்தார். மேலும் பக்தர்களால் 164 கிராம் தங்கம் மற்றும் 4959 கிராம் வெள்ளி காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News