செய்திகள்
சிங்கப்பெருமாள் கோவிலில் ஏடிஎம் எந்திரம் உடைக்கப்பட்டு இருக்கும் காட்சி

ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி - சிறுவன் கைது

Published On 2019-08-19 08:53 IST   |   Update On 2019-08-19 08:53:00 IST
சிங்கப்பெருமாள் கோவிலில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
வண்டலூர்:

காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ரெயில்வே ஸ்டேஷன் தெருவில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று அதிகாலையில் ஒரு சிறுவன், ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைந்து, ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொண்டிருந்தான்.

அப்போது அந்த வழியாக நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தவர்கள், இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று, பொதுமக்கள் உதவியுடன் ஏ.டி.எம். மையத்தில் எந்திரத்தை உடைத்து கொண்டிருந்த சிறுவனை கையும் களவுமாக மடக்கிப்பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.

அதில் அவர், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து அதில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் அந்த சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்து, அவனை கைது செய்தனர்.

நடைபயிற்சியில் ஈடுபட்டவர்கள் போலீசாருக்கு உரிய நேரத்தில் தகவல் கொடுத்ததால் ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள லட்சக்கணக்கான பணம் கொள்ளை போகாமல் தடுக்கப்பட்டது.

மேலும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது சிறுவன் மட்டும்தானா? அல்லது வேறு யாராவது உடந்தையா? எனவும் அவர்களின் உருவம் பதிவாகி உள்ளதா என்பதை அறிய ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

இந்த சம்பவம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News