செய்திகள்
அத்திவரதர்

அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்

Published On 2019-08-17 20:18 GMT   |   Update On 2019-08-17 20:31 GMT
காஞ்சிபுரத்தில் 48 நாட்கள் அத்திவரதர் தரிசனம் நிறைவடைந்ததை தொடர்ந்து, அத்திவரதர் சிலை மீண்டும் கோவில் குளத்துக்குள் வைக்கப்பட்டது.
காஞ்சீபுரம் :

கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்துக்குள் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் அத்திவரதர் வைபவம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் அங்குள்ள வசந்த மண்டபத்தில் அத்திவரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஜூலை 31-ந்தேதி வரை சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்திவரதர், பின்னர் ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் நிறைவு நாள் வரை நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் அத்திவரதர்.

வாழ்க்கையில் அபூர்வமாக கிடைக்கும் தரிசனம் என்பதால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், கேரளா, மராட்டியம் போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து அத்திவரதரை தரிசித்தனர்.



ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், கலையுலகைச் சேர்ந்தவர்கள் என ஏராளமான முக்கிய பிரமுகர்களும் வந்து அத்திவரதரை தரிசித்தனர்.

நேற்று வரை அத்திவரதரை தரிசித்த பக்தர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டிவிட்டதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் பக்தர்கள் தரிசனம் நிறைவடைந்ததையொட்டி, அன்று இரவே கோவில் கிழக்கு ராஜ கோபுரம் மூடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் மீண்டும் வைக்கப்படும் 48-ம் நாளான நேற்று வி.ஐ.பி. பக்தர்கள் உள்பட எவரும் அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்படவில்லை. காலை பட்டாச்சாரியார்கள் அத்திவரதருக்கு காவி மற்றும் ரோஜா நிற பட்டாடை அணிவித்து, பூஜை செய்தனர். இதையடுத்து ஆகம விதிப்படி, விசேஷ பூஜைகள் செய்யப்பட்டன.

நேற்று அதிகாலை அத்திவரதருக்கு பரிகார பூஜைகள் தொடங்கியது. அடுத்த 40 ஆண்டுகளுக்கு சிலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் அத்திவரதருக்கு 60 கிலோ மூலிகை தைலம் பூசப்பட்டது. சாம்பிராணி தைலம் உள்ளிட்ட மூலிகை திரவியங்கள் அத்திவரதர் சிலைக்கு பூசப்பட்டது. இந்த 60 கிலோ மூலிகையில் சந்தானாதி தைலம் கலந்துள்ளது. இதில், குங்குமப்பூ, வெட்டிவேர், நொச்சிவேர், சாம்பிராணி, ஏலம், சாதிக்காய், லவங்கம் உள்ளிட்டவை கலந்து இருந்தன.



இதனையடுத்து, நேற்று இரவு அனந்தசரஸ் திருக்குளத்தில் அத்திவரதர் சிலை சயனநிலையில் வைக்கப்பட்டது. குளத்தில் உள்ள அத்திவரதர் மண்டபத்தின் கீழ் உள்ள அறையில் சிலை வைக்கப்பட்டது. அதில், அத்திவரதரின் தலைப்பகுதி மேற்கு பாகத்திலும், திருவடி கிழக்குநோக்கியும் உள்ளவாறு வைக்கப்பட்டுள்ளது. தலைப்பகுதியில் ஆதிசேஷன் வைக்கப்பட்டுள்ளது. சிலை வைக்கும்போது ஒருசில அர்ச்சகர்கள் தவிர யாரும் அனுமதிக்கப்படவில்லை.

முன்னதாக, நேற்று மாலை 4 மணி அளவில் அத்திவரருக்கு 48 வகையான நைவேத்தியங்களை பட்டாச்சாரியார்கள் படைத்து கற்பூர தீபாராதனை காட்டினார்கள். பிறகு காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அத்திவரதரை காண அவர் இருக்கும் இடமான வசந்த மண்டபத்திற்கு வந்தார். அப்போது, வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி கொடுத்து விடைகொடுத்தார். பிறகு வரதராஜ பெருமாளுக்கு கற்பூர தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என்று பக்தி கோஷமிட்டனர்.

பிறகு அத்திவரதருக்கு மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை தைலக்காப்பை கோவை பட்டாச்சாரியார்கள் தடவினார்கள். பிறகு அத்திவரதர் வெண் பட்டு அணிவித்து வெள்ளி அணிவிக்கப்பட்டு வசந்த மண்டபத்தில் இருந்து கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் சயன கோலத்தில் நேற்று நள்ளிரவு வைக்கப்பட்டார்.   அனந்தசரஸ் குளத்தில் ஜலவாசம் செய்யும் அத்திவரர், 40 ஆண்டுகளுக்கு 2059-ம் ஆண்டு மீண்டும் அருள்பாலிக்க வருவார்.  
Tags:    

Similar News