செய்திகள்
தீ பற்றி எரிந்த திருமண மண்டபம்.

சுவாமிமலையில் பேரூராட்சி திருமண மண்டபத்தில் திடீர் தீவிபத்து

Published On 2019-07-27 19:18 IST   |   Update On 2019-07-27 19:18:00 IST
சுவாமிமலையில் பேரூராட்சி திருமண மண்டபத்தில் அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.5 லட்சம் மதிப்பிலான மிக்சி-கிரைண்டர் எரிந்து சேதம் அடைந்தன.

சுவாமிமலை:

சுவாமிமலை பேரூராட்சி சார்பில் 2 ஆண்டுகளுக்கு முன்பு சுவாமிமலையில் ஒரு திருமண மண்டபம் கட்டப்பட்டது. இந்த மண்டபத்தில் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய 2500 விலையில்லா மிக்சி மற்றும் கிரைண்டர்கள் வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் சுவாமிமலையில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை கண்ட சுவாமிமலை போலீசார் கும்பகோணம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருந்த போதிலும் அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிக்சி-கிரைண்டர்கள் எரிந்து சேதமாகி விட்டன.

இது பற்றிய தகவல் கிடைத்ததும் கும்பகோணம் தாசில்தார் நெடுஞ்செழியன், சுவாமிமலை பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகர் ஆகியோர் சம்பவ இடம் வந்து தீ விபத்து நடந்த திருமண மண்டபத்தை பார்வையிட்டனர். திருமண மண்டபத்துக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரின்பேரில் சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

திருமண மண்டபத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் கடந்த 2 ஆண்டாக வைத்திருந்த விலையில்லா மிக்சி-கிரைண்டர் எரிந்து விட்டது தெரியவந்துள்ளது. மேலும் இந்த திருமண மண்டபத்தை திருமணம் போன்ற நிகழ்ச்சிக்கு வாடகைக்கு விடாமல் குடோனாக பயன்படுத்தி வந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Similar News