செய்திகள்
கைது

நூதன முறையில் மூதாட்டியிடம் நகை பறித்த ஆட்டோ டிரைவர் கைது

Published On 2019-07-27 14:29 IST   |   Update On 2019-07-27 14:29:00 IST
அம்பத்தூர் அருகே சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறித்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
அம்பத்தூர்:

அம்பத்தூரை அடுத்த கன்னனூர் ஜோதிநகரைச் சேர்ந்தவர் காளீஸ்வரி (65). இவர் கடந்த 4-ந்தேதி வில்லிவாக்கம் தெற்கு செங்குன்றம் சாலையில் முருகன் கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு எதிரில் வந்த 60 வயது முதியவர் காளீஸ்வரியிடம் இங்கு திருடர்கள் நடமாட்டம் உள்ளது. நகைகளை அணிந்து செல்ல வேண்டாம் என கூறி ஆட்டோவில் அனுப்பி வைத்தார். முன்னதாக காளீஸ்வரி அணிந்திருந்த 4½ பவுன் நகைகளை கழற்றி ஆட்டோ டிரைவர் கொடுத்த துணியில் பொட்டலமாக மடித்து கொடுத்தார்.

பின்னர் ஆட்டோவில் இருந்து இறங்கிய காளீஸ்வரி பொட்டலத்தை பிரித்து பார்த்தார். அப்போது நகை இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்த காளீஸ்வரி வில்லிவாக்கம் போலீசில் புகார் செய்தார்.

உடனே சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.

பின்னர் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் நபி என்கிற நபீஸ் (38), திருவள்ளூர் மாவட்டம் அத்தி பட்டுவைச் சேர்ந்த ‌ஷகில் என்கிற சையது கவுஸ் (40) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 8 பவுன் தங்க நகை மற்றும் ஒரு ஆட்டோவை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான எமபூப் பாஷா (60) தலைமறைவாக உள்ளார். எனவே அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் இந்த 3 பேர் மீதும் ஜாம்பஜார், ராயப்பேட்டை, மயிலாப்பூர், மெரினா, கொளத்தூர், அயனாவரம், கோயம்பேடு ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.

Similar News