செய்திகள்
பவானிசாகர் அணை

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

Published On 2019-07-23 08:07 GMT   |   Update On 2019-07-23 08:07 GMT
பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் பவானி சாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து, அணையின் நீர் மட்டமும் உயர வாய்ப்புள்ளது.
சத்தியமங்கலம்:

பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு கடந்த சில நாட்களாகவே நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

நேற்று அணைக்கு வினாடிக்கு 3609 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இன்று அது மேலும் அதிகரித்து வினாடிக்கு 3796 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 1½ அடி உயர்ந்து இன்று காலை 8 மணி நிலவரப்படி 60.23 அடியாக உயர்ந்து உள்ளது.

குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

மேலும் தற்போது நீலகிரி மலையில் உள்ள பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் அந்த தண்ணீரும் பவானி சாகர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணைக்கு மேலும் கூடுதலாக தண்ணீர் வரத்து அதிகரித்து அணையின் நீர் மட்டமும் உயர வாய்ப்புள்ளது.

இதனால் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஒரு மணி நேரம் சாரல் மழை பெய்தது.

Tags:    

Similar News