செய்திகள்
குடிநீர் ரெயில்

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல மேலும் ஒரு ரெயில் வருவது தாமதம்

Published On 2019-07-18 10:06 GMT   |   Update On 2019-07-18 10:06 GMT
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல மேலும் ஒரு ரெயில் வர தாமதம் ஏற்பட்டுள்ளது.
வேலூர்:

சென்னை நகர மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஜோலார்பேட்டையிலிருந்து ரெயில் மூலம் சென்னைக்கு தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி ஜோலார் பேட்டையில் தமிழக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும், மெட்ரோ குடிநீர் அதிகாரிகளும் இரவு பகலாக பணிகளை மேற்கொண்டனர். கடந்த 12-ந் தேதி முதல் ஜோலார்பேட்டையில் ரெயில் நிலையத்திலிருந்து 50 வேகன்களை கொண்ட ரெயில் 25 லட்சம் லிட்டர் தண்ணீருடன் வில்லிவாக்கம் ரெயில் நிலையம் சென்றது. அங்கு அமைக்கப்பட்டுள்ள குழாய்களில் தண்ணீரை இறக்கி வினியோகிக்கப்பட்டு வருகிறது.

நாள்தோறும் ஒரு ரெயில் மூலம் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் சென்னை நகர மக்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மேலும் ஒரு ரெயிலில் குடிநீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மற்றொரு ரெயில் 50 வேகன்களுடன் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் இன்று வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ரெயில் வேகன்கள் இன்னும் தயாராகவில்லை. இதனால் ரெயில் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த ரெயில் வர மேலும் 2 நாட்கள் ஆகும். அந்த ரெயில் வந்ததும் 2 ரெயில்களில் சென்னை மக்களுக்கு 50 லட்சம் லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்படும்.

ரெயில்களின் இயக்கத்தை படிப்படியாக உயர்த்தி தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருவதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News