செய்திகள்
ஜல்லிக்கட்டு

கிருங்காக்கோட்டை கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை- கலெக்டர் உத்தரவு

Published On 2019-07-12 10:34 GMT   |   Update On 2019-07-12 10:34 GMT
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள கிருங்காக்கோட்டை கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த கலெக்டர் ஜெயகாந்தன் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், கிருங்காக்கோட்டை கிராமத்தில் வருகிற 14-ந் தேதி ஜல்லிக்கட்டு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்தப்பகுதி மக்கள் வாழும் குடியிருப்பு பகுதியாகவும், பொதுமக்கள் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லாத காரணத்தினாலும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க இயலாதென சிங்கம்புணரி வட்டாட்சியர் அனுமதி மறுத்தார்.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக அரசால் சட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டு அதில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வருடத்தில் ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலமே அனுமதிக்கப்பட்ட காலம் என்பதால் கிருங்காக்கோட்டை கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அரசால் அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை.

தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர், திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் சிங்கம்புணரி வட்டாட்சியர் ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு 14-ந்தேதி ஜல்லிக்கட்டு நடைபெறாத வகையில் கண்காணித்து சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அன்றைய தினம் தடையை மீறி பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத குடியிருப்பு பகுதியில் அரசு அனுமதியின்றி சட்டத்திற்கு புறம்பாக ஜல்லிக்கட்டு நடத்தினால் கிராம ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர் மற்றும் விழா குழுவினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன் அனுமதி பெறாத கிருங்காக்கோட்டை கிராமத்திற்கு ஜல்லிக்கட்டு மாடுகளை அழைத்து வரும் ஜல்லிக்கட்டு மாடுகளின் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்களும், ஜல்லிக்கட்டு மாடு உரிமையாளர்களும் பொதுமக்கள் நலன் கருதி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் சட்டப்படி மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News