செய்திகள்

சீர்காழி அருகே கார் மோதி பிளஸ்-1 மாணவர் பலி

Published On 2019-06-08 14:41 GMT   |   Update On 2019-06-08 14:41 GMT
சீர்காழி அருகே நடந்த சென்ற பிளஸ்-1 மாணவர் மீது கார் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த பாதிரியாரை போலீசார் கைது செய்தனர்.

சீர்காழி:

நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் அருகே உள்ள பூங்குடி கிராமத்தை சேர்ந்தவர் மோசஸ் (வயது 50). இவர் பூங்குடி கிராமத்தை அடுத்த பெரம்பூர் கிராமத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியராக இருந்து வருகிறார். இவருக்கு சொந்தமான காரில் சென்னை சென்று விட்டு இரவு மீண்டும் பூங்குடிக்கு திரும்ப வந்து கொண்டிருந்தார்.

கொள்ளிடம் அருகே தைக்கால் மெயின்ரோட்டில் கார் வந்து கொண்டிருந்தது. கீழவல்லம் கிராமத்தை சேர்ந்த செல்லத்துரை மகன் சூர்யா (16). பிளஸ்-1 மாணவரான இவர் தனது நண்பர்களுடன் கோவில் திருவிழாவுக்கான பேனர் வைக்க தைக்கால் மெயில் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே பாதிரியார் மோசஸ் என்பவர் ஓட்டி வந்த கார் திடீரென மாணவர் சூர்யா மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சூர்யா, சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்தில் சூர்யாவுடன் வந்த கீழவல்லம் கிராமத்தை சேர்ந்த அஜய் (14), தாமோதரன் (15), சுசீந்திரன் (15), அனுபாயன் (19), நவீன்குமார் (16) ஆகிய 5 பேரும் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார்கள்.

இது குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த பாதிரியார் மோசஸ்சை கைது செய்தனர்.

Tags:    

Similar News