செய்திகள்
மின்சாரம் தாக்கி இறந்த திலகவதி

மின்சாரம் தாக்கிய கணவரை காப்பாற்ற முயன்ற மனைவி பலி

Published On 2019-06-05 15:49 IST   |   Update On 2019-06-05 15:49:00 IST
ஈரோட்டில் மின்சாரம் தாக்கிய கணவரை காப்பாற்ற முயன்ற மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு:

ஈரோடு சூரம்பட்டி, காமராஜ் வீதியை சேர்ந்தவர் சங்கர். பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி திலகவதி(39). ஓட்டு வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவரது வீட்டில் மின்விசிறி ஒரு கம்பியில் தொங்க விடப்பட்டிருந்தது. இந்த கம்பியானது வீட்டின் வெளிபுறம் வரை நீட்டிவிடப்பட்டுள்ளது.

அந்தக் கம்பியின் மீது இன்று காலை சங்கர் துணியை காய போட்டு கொண்டிருந்தார்.

அப்போது அவரை எதிர்பாராத வகையில் மின்சாரம் தாக்கியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த திலகவதி கணவரை காப்பாற்ற ஓடி வந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக திலகவதியும் அந்த கம்பியை பிடித்து விட்டார். இதில் மின்சாரம் தாக்கி திலகவதி தூக்கி வீசப்பட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கணவன் மனைவி இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

அவர்களை பரிசோதித்த டாக்டர் திலகவதி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார். அவரது கணவர் லேசான காயத்துடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவனை காப்பாற்ற முயன்ற பெண் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உறவினர்கள் கதறி அழுத காட்சி உருக்கமாக இருந்தது.




Similar News