செய்திகள்

மயிலாடுதுறை-திருநெல்வேலி ரெயிலை முறையாக இயக்காவிட்டால் போராட்டம் - பொதுமக்கள் முடிவு

Published On 2019-06-04 09:00 GMT   |   Update On 2019-06-04 09:00 GMT
மயிலாடுதுறை மற்றும் திருநெல்வேலி ரெயிலை முறையாக இயக்காவிட்டால் போராட்டம் நடைபெறும் என பொதுமக்கள் கூறியுள்ளனர்.

மயிலாடுதுறை:

மயிலாடுதுறையில் இருந்து திருச்சி வழியாக திருநெல்வேலிக்கு பகல் 11.20 மணிக்கும் தென்னக ரெயில்வே பல ஆண்டுகளாக ரெயில்களை இயக்கி வந்தது. இந்த ரெயில் மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் திருச்சி பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருந்தது. குறிப்பாக தினசரி மயிலாடுதுறை-திருச்சி வரை ரெயிலில் மாணவர்கள், வேலைக்கு செல்வோருக்கும் மருத்துவமனைகளுக்கு செல்லும் வயதானவர்கள் மற்றும் பெண்களுக்கும் பயனுள்ளதாக இருந்தது.

ஆனால் மேற்படி ரெயில்ளை கடந்த ஏப்ரல் மாதம் முதலே விட்டுவிட்டு நிறுத்துவதும், இயக்குவதுமாக இருந்தது. இதற்கு காரணம் தஞ்சாவூர்-திருச்சி இடையே இருப்புப்பாதை பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாக ரெயில்வே தரப்பில் கூறப்பட்டது. ஆனால் அவர்கள் குறிப்பிட்டபடி இருப்புப்பாதை பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடை பெறவில்லை என்றும், தேவையில்லாமல் மயிலாடுதுறை ரெயில்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இப்பாதையில் இயங்கும் இதர ரெயில்கள் அனைத்தும் தடையின்றி இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். கடந்த மாதம் முதல் இப்பிரச்சனை மக்கள் பிரச்சனையாக மாறி மயிலாடுதுறை மக்களுக்கு மட்டுமல்லாமல் குத்தாலம், கும்பகோணம், போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்களும் போராட்டங்கள் துவங்கிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் மயிலாடுதுறையில் இருந்து இந்த ரெயிலை திருநெல்வேலி வரை தொடர்ந்து உடன் இயக்காவிட்டால் பொது தொழிலாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெறும் என்று மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பொது தொழிலாளர்கள் சங்க தலைவருமான ஜெக வீரபாண்டியன் மத்திய ரெயில்வே அமைச்சர் மற்றும் தென்னக ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனுக்களை அனுப்பியுள்ளார்.

தஞ்சாவூர் வரை மட்டுமே ரெயில்கள் இயங்குகிறது என்பதால் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் கொடுத்து செல்லவேண்டும் என்பதால் பயணிகள், மாணவர்கள் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

எனவே மயிலாடுதுறை- திருநெல்வேலி ரெயிலை முறையாக இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News