செய்திகள்

மண்டபம் அருகே வி‌ஷம் தின்ற 11 பசு மாடுகள் பலி

Published On 2019-05-29 17:28 GMT   |   Update On 2019-05-29 17:28 GMT
மண்டபம் அருகே மேய்ச்சலுக்குச் சென்ற 11 பசு மாடுகள் வி‌ஷம் கலந்த உணவை தின்று பரிதாபமாக பலியாயின.
பனைக்குளம்:

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் முகாம் அருகே உள்ள முனைக்காடு வண்ணாந்தரவை பகுதியில் மண்டபம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதில் முனைக்காடு பகுதி வீடுகளில் வளர்க்கப்படும் பசுக்கள் மேய்ச்சலுக்கு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் காலையில் மேய்ச்சலுக்குச் சென்ற கறவை பசுக்கள் இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதன் உரிமையாளர்கள் தேடிச்சென்ற போது பசுக்கள் ஒன்றன் பின் ஒன்றாக சாலையோரம் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.

இந்த சம்பவம் குறித்து மண்டபம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், முனைக்காடு பகுதியை சேர்ந்த பால்ராஜ், நாகலட்சுமி, பாகம்பிரியாள் ஆகியோருக்கு சொந்தமான 11 பசுக்கள் குருணை மருந்து கலந்த சத்துமாவை சாப்பிட்டு இறந்துள்ளது தெரியவந்தது.

பசுக்களின் இறப்பில் மர்மம் இருப்பதாக உரிமையாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கால்நடை மருத்துவர்கள் இறந்த பசுக்களின் உடல்களை பரிசோதனை செய்தனர்.

இது குறித்து மாட்டின் உரிமையாளர்கள் கூறுகையில், “குப்பை கழிவுகளில் கிடந்த குருணை மருந்தை தின்று வாயில் நுரை தள்ளிய நிலையில் பசுக்கள் இறந்துள்ளன. இறந்த கறவை பசு ஒன்றின் மதிப்பு ரூ.50 ஆயிரம்“ என தெரிவித்தனர்.

பசுக்களை கொல்ல குருணை மருந்தில் சத்துமாவை கலந்து குப்பையில் யாரேனும் வீசிச்சென்றனரா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஒரே நாளில் 11 கறவை பசு மாடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Tags:    

Similar News