செய்திகள்

திருவள்ளூரில் சூறைக்காற்றில் மின்கம்பங்கள் சரிந்தன - 10 கிராமங்களில் 3-வது நாளாக மின்சாரம் துண்டிப்பு

Published On 2019-05-09 15:27 IST   |   Update On 2019-05-09 15:27:00 IST
திருவள்ளூரில் சூறாவளி காற்றுடன் பெயத கனமழையால் மின்கம்பங்கள் சரிந்ததையடுத்து 10 கிராமங்களில் 3-வது நாளாக மின் வினியோகம் பாதிக்கப்பட்டது.
திருவள்ளூர்:

திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

இதில் சென்னை-திருப்பதி சாலையில் 18 மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. கிராம பகுதிகளில் 30-க்கும் அதிகமான மின் கம்பங்கள் சரிந்தன.

இதனால் திருவள்ளூரை சுற்றியுள்ள அரண் வாயில், அரண்வாயில் குப்பம், திருவூர்மணவாள நகர், வேப்பம்பட்டு, கூடப்பாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது. மின்கம்பங்களை சரி செய்யும் பணி நடந்து வருகிறது.

மின் கம்பங்களை சரி செய்து மின் இணைப்பு கொடுக்கும் பணி இன்னும் நிறைவு பெறவில்லை. எனவே, 3-வது நாளாக நேற்றும் இந்த கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்யவில்லை.

இரவிலும் மின்சாரம் வராததால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பூந்தமல்லி-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும், திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் மற்றும் வெள்ளவேடு போலீசார் சம்பவ இடம் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

விரைவில் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து, போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர். இரவில் நடந்த திடீர் போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News