செய்திகள்

திருப்பரங்குன்றம் தொகுதியில் 181 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை- போலீஸ் டி.ஜி.பி. தகவல்

Published On 2019-05-08 11:34 GMT   |   Update On 2019-05-08 11:34 GMT
திருப்பரங்குன்றம் தொகுதியில் 181 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா கூறினார்.
மதுரை:

திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் போலீஸ் டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1670 பேர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேர்தலை முன்னிட்டு நகரில் 18 இடங்களிலும், தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 27 இடங்களிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடைசி நேரத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் அதிகாரிகளுடன் போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகிறார்கள்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் 297 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் நகரில் உள்ள 47 வாக்குச்சாவடிகளும், தொகுதியில் உள்ள 134 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 181 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதலாக மத்திய-மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இடைத்தேர்தலையொட்டி பாதுகாப்பு பணிக்காக 3600 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இவ்வாறு அவர்கூறினார்.

கூட்டத்தில் மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், மாவட்ட போலீஸ் சூப்பிரண் மணிவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News