செய்திகள்

தண்ணீர் பந்தலில் டம்ளர் திருடிய போலீஸ்காரர் இடமாற்றம்

Published On 2019-05-06 09:42 IST   |   Update On 2019-05-06 09:42:00 IST
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களின் தாகம் தீர்ப்பதற்காக வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலில் இருந்து டம்ளர் திருடிய போலீஸ்காரர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு பகுதி இளைஞர்கள் கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் தாகம் தீர்ப்பதற்காக அங்கு தண்ணீர் பந்தல் அமைத்திருந்தனர். பானையில் தண்ணீரும், டம்ளர்களும் வைத்திருந்தனர்.

இந்த நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த டம்ளர்கள் அடிக்கடி காணாமல் போனது. இதனால் அதனை எடுத்து சென்ற மர்ம நபர்கள் யாரென்று கண்டறிய அங்கு பொதுமக்கள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகிய காட்சிகளை இளைஞர்கள் பார்த்தனர்.

அப்போது கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் அய்யப்பன் மற்றும் ஊர்க்காவல் படை வீரர் வடிவழகன் ஆகியோர் திருடுவது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தது.

டம்ளரை திருடி சென்றது போலீஸ்காரர்கள் என்று தெரிந்ததும் இளைஞர்கள், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவ ஆரம்பித்தன. அதனை பார்த்த போலீஸ் உயர் அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தனர். மேலும் டம்ளர் திருடிய போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் போலீஸ்காரர் அய்யப்பனை ஆயுதப் படைக்கு இடமாற்றம் செய்து புதுக்கோட்டை எஸ்.பி. செல்வராஜ் இன்று உத்தரவிட்டார். மேலும் ஊர்க் காவல்படை வீரர் வடிவழகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News